வீடியோ.. ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு.. தாங்க முடியாமல் அழுத ஆண்டர்சன் – 1000 விக்கெட் மேல் வீழ்த்திய அபூர்வ ஜோடி பிரிகிறது!

0
3310
Anderson

உலகக் கிரிக்கெட்டில் 41 வயதை தொட்டு வேகப்பந்துவீச்சாளராக இந்த நொடியிலும் ஒரு வீரரின் கால்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஓடிக்கொண்டே இருக்கிறது என்றால், அது இங்கிலாந்தின் ஸ்விங் கிங் ஜேம்ஸ் ஆண்டர்சன்தான்!

தன்னுடைய மாயாஜால ஸ்விங் வேகப்பந்து வீச்சால் உலகின் பல முன்னணி பேட்ஸ்மேன்களையும் தடுமாற விட்டு, கிரிக்கெட் ரசிகர்களுக்கு பந்தின் மூலம் கண்காட்சி காட்டியவர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

- Advertisement -

இதுவரை 182 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 689 விக்கெட்டுகளை கைப்பற்றி, வேகப்பந்து வீச்சு கலையில் தனி முத்திரை பதித்து, இப்பொழுதும் அசராமல் ஓடிக் கொண்டிருக்கிறார். இன்று ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 41 வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இங்கிலாந்தில் நடந்து கொண்டிருக்கும் ஆசஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் இவரது பந்துவீச்சு கூட்டாளி ஸ்டூவர்ட் பிராட். இதுவரை இவர் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 600 சர்வதேச டெஸ்ட் விகெகட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்டூவர்ட் பிராட் இவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடி, இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் அமைத்து, மொத்தமாக 1037 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

கிரிக்கெட் உலகில் உடைக்க முடியாத ஒரு சாதனை இருக்கும் என்றால் நிச்சயமாக இந்தச் சாதனையை சொல்லலாம். ஏனென்றால் வேகப்பந்து வீச்சில் ஒரே நேரத்தில், ஒரே அணியில் இத்தனை காலம் சேர்ந்து இரண்டு லெஜெண்டுகள் பந்துவீசினால் மட்டுமே, இந்தச் சாதனையை முறியடிக்க முடியும். ஆனால் இப்படி ஒரே அணியில், ஒரே காலத்தில் இரண்டு லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர்கள் அமைவார்கள் என்றால் அது கடினமானது.

41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் களத்தில் வேகப்பந்து வீச்சாளராக ஓடிக்கொண்டிருக்க, ஆஸ்துமாவை வென்று தன்னை விளையாட்டு உலகில் மிகப்பெரிய வீரராக முன்னிறுத்திய ஸ்டூவர்ட் பிராட் 37 வது வயதில் ஓய்வு பெறுகிறார்.

தன்னுடைய பந்துவீச்சுக் கூட்டாளி ஓய்வு பெறுவது குறித்து ஆண்டர்சன் இடம் கேட்ட பொழுது, அவருக்கு நா தழுதழுக்க, கண்களில் கண்ணீர் முட்ட, அவரால் சில வார்த்தைகளுக்கு மேல் பேச முடியவில்லை. இறுதியாக பேட்டி எடுக்க முயற்சி செய்தவரே ஆண்டர்சனை பேச வேண்டாம் நீங்கள் போய் வாருங்கள் என்று அனுப்பி வைத்து விட்டார். அந்த அளவிற்கு அந்தக் காட்சி இதயத்தைக் கரைப்பதாக இருந்தது. இதற்கான இரண்டு வீடியோ இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பேட்டியில் ஆண்டர்சன் “நான் அவரை மிஸ் செய்வேன். எனக்கு தேவைப்பட்ட பொழுதெல்லாம், அவர் என்னுடன் இருந்தார். அவர் என்னுடைய சிறந்த பார்ட்னர். நான் அவரை நிச்சயம் மிஸ் செய்வேன்!” என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார்!