இந்திய அணியின் டி20 துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரகானே இருவரும் 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக டக் அவுட் ஆகி ஒரே நேரத்தில் வெளியேறி இருந்தார்கள்.
இதற்கு அடுத்து ஏழு வருடங்கள் கழித்து, நேற்று இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஒரே நேரத்தில் வெளியேறி இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா டி20 தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர் ருதுராஜுக்கு தென் ஆப்பிரிக்க தொடரில் இந்த முறை வாய்ப்பு தரப்படவில்லை.
மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட வைக்காமல் ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கும் சுப்மன் கில்லுக்கு நேற்று வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
சுப்மன் கில் சர்வதேச டி20 போட்டியில் பெரிதான செயல்பாட்டை கொண்டு இருக்கவில்லை. அவர் கடைசியாக விளையாடிய 6 சர்வதேச டி20 போட்டியில் ஒரு அரை சதம் மட்டும் அடித்திருக்கிறார். மிக முக்கியமாக மீதம் 5 போட்டிகளில் இரட்டை இலக்கத்தை தொடாமல் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்றைய போட்டியிலும் லிசாட் வில்லியம்ஸ் வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு பந்துகள் விளையாடிய நிலையில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ருதுராஜின் இடத்தில் விளையாடி டக் அவுட் ஆனதால் விமர்சனங்கள் அதிகரிக்கின்றன.
இந்த நிலையில் நேற்று கில் விக்கெட்டை கைப்பற்றிய லிசாட் வில்லியம்ஸ், தலையில் கிரீடத்தை வைப்பது போலவும் எடுப்பது போலவும் சைகை செய்து கொண்டாடினார்.
அவர் ஏன் இப்படி கொண்டாடி இருக்கிறார் என்றால், விராட் கோலியை கிங் என்று அழைப்பது போல, சுப்மன் கில்லை பிரின்ஸ் அதாவது இளவரசன் என்று அழைக்கிறார்கள். எனவே இதை கேலி செய்யும் விதமாக அவர் மைதானத்திலேயே கில்லை சீண்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!