இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தம் வாழ்நாளில் கடந்து வந்த பாதையை தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் நடத்திய யூடியூப் நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்த வருண் சக்கரவர்த்தி, அதில் சரியாக செயல்படாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு மூன்று ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு வருண் சக்கரவர்த்தி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி வெற்றிக்கு வருண் சக்கரவர்த்தி முக்கிய காரணமாக மாறினார். இந்த நிலையில் தம் வாழ்நாளில் கடந்து வந்த பாதை குறித்து அஸ்வினிடம் வருண் சக்கரவர்த்தி கூறினார்.
அதில், நான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒன்றரை ஆண்டுகளாக கட்டுமான நிறுவனத்தில் துணை பொறியாளர் பணியில் இருந்தேன். அப்போது என்னுடைய ஊதியம் மாதத்திற்கு 14 ஆயிரம் ரூபாய். அந்த நிறுவனத்தை விட்டு நான் வெளியேறியும் போது என்னுடைய சம்பளம் 18,000 ரூபாயாக உயர்ந்து இருந்தது.
இசை பயிற்சி எடுத்தேன்:
அதன் பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, இசை மீது எனக்கு நாட்டம் வந்தது. சரி என கித்தார் வாசிக்கலாம் என்று அதற்கான பயிற்சி எடுத்தேன். தேவாலயத்தில் இசைக்குழுவிலும் நான் இணைந்தேன். ஆனால் கித்தார் பயிற்சி செய்யும் போது என்னால் ஒரு மணி நேரம் கூட அதை வைத்து பயிற்சி செய்ய இயலவில்லை.
அப்போதுதான் எனக்கு தெரிந்தது நான் மற்றவர்களை கவர்வதற்காக தான் இந்த பணியை செய்கிறேன் தவிர என் உள்ளுணர்வில் இருந்து இதை செய்யவில்லை என்று எனக்கு புரிந்தது. சரி அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது சினிமா மீது நாட்டம் வந்தது. சினிமாவில் என்னுடைய நண்பர்கள் சிலர் இருந்தனர்.
திரைப்படத்தில் நடித்தேன்:
அவர்கள் வழியாக பல திரைப்பட ஷூட்டிங் களுக்கு செல்வேன். அப்போது ஜீவா என்ற திரைப்படம் கிரிக்கெட் மைதானங்களில் சென்னை எடுக்கப்பட்டிருந்தது, அந்த படம் ஷூட்டிங்கில் பார்க்க சென்றபோது துணை இயக்குனராக மாறிவிட வேண்டும் என்று முயற்சி செய்தேன். அப்போது துணை இயக்குனர் ஒருவர் எனக்கு ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக வாய்ப்பு வழங்கினார்.
சுமார் 20 நாட்கள் படபிடிப்பு நடைபெற்றது. இதில் என்னுடைய சம்பளம் ஒரு நாளைக்கு 600 ரூபாயாக இருந்தது. அந்த காலகட்டத்தில் அந்த சம்பளம் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என பல திரைக்கதைகளை எழுதினேன். அப்போதுதான் எனக்கு தெரிந்தது எனக்கு உணர்ச்சி வசமாக கதையை யோசிக்க தோன்றுகிறது. ஆனால் அதை எழுத்து வடிவத்தில் மாற்ற தெரியவில்லை என்பதை உணர்ந்தேன்.
இதையும் படிங்க: இந்தியா இங்கிலாந்து U-19 2வது ஒருநாள் போட்டி.. 5 பவுண்டரி, 3 சிக்சர்.. 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபாரம்.. சிஎஸ்கே வீரர் சொதப்பல்
இப்படி இருக்கும் போது தான் திடீரென்று கிரிக்கெட் பக்கம் நாட்டம் திரும்பியது.கிரிக்கெட்டில் பந்து வீசத் தொடங்கிய போது எனக்கு அளவற்ற மனநிறைவு இருந்தது. அது எனக்கு ஒரு சுமையாகவே தெரியவில்லை. தொடர்ந்து நான் பந்து வீசிக்கொண்டே இருந்தேன். என்னை தொடர்ந்து ஒரு ஆறு மணி நேரம் வீசு என்று சொன்னால் கூட நான் பந்து வீசுவேன். அப்படி கிரிக்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தேன். தற்போது எனக்கு இந்திய அணியின் ஒருநாள் சம்பளமாகவே 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என்று வருண் சக்கரவர்த்தி கூறினார்.






