இன்று தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக சாதனை படைத்தார். போட்டிக்குப் பிறகு இது குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி மொத்தம் 117 ரன்கள் மட்டுமே எடுத்து இருபது ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் வீசி மொத்தம் 11 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
சாதனைகளை யோசிப்பதில்லை
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 15.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டுக்கு ஒன்று என முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டி குறித்து பேசி உள்ள வருண் சக்கரவர்த்தி கூறும் பொழுது “நான் இந்த போட்டியில் என்ன சாதனை செய்தேன் என எனக்கு உண்மையில் தெரியாது. நீங்கள் அதை எனக்கு சொன்னதற்காக மிகவும் நன்றி. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்து வீசும் பொழுது சீம் அசைவு இருந்தது. ஆனால் இங்கு விளையாடுவது ஒட்டுமொத்தத்தில் கடினமான சூழ்நிலையாக இருந்தது. நான் இவ்வளவு குளிரான மைதானத்தில் விளையாடியது இல்லை. இது எனக்கு சவாலாக இருந்தது”
இந்த மீட்டிங் நடத்தினோம்
“சென்னையில் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை எப்பொழுதுமே இருக்காது. நாங்கள் இரண்டாவது டி20 போட்டி முடிவடைந்ததும் ஒரு பவுலிங் மீட்டிங்கையும், சில நேர்மையான உரையாடல்களையும் நடத்தினோம். நாங்கள் எங்கே தவறு செய்தோம் எனக் கண்டறிந்து சரியான அணுகுமுறையில் கவனம் செலுத்தினோம். இதற்கான பெருமை பந்துவீச்சாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு செல்லும்”
இதையும் படிங்க : 15 ஓவர்.. தொடரும் கேப்டன் துணை கேப்டன் சொதப்பல்.. இந்திய பவுலர்கள் மாஸ்.. தென் ஆப்பிரிக்கா படுதோல்வி
“நான் இன்று என்னுடைய பலத்தில் ஒட்டிக் கொள்ள விரும்பினேன். இந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்பவில்லை ஆனால் நன்றாக சறுக்கியது. எனவே நான் பந்தை முடிந்தவரை பேட்ஸ்மேன்களுக்கு நன்றாக சறுக்கும்படி செய்வதில் கவனம் செலுத்தினேன். நான் இந்தியாவுக்காக விளையாடி விக்கெட் கைப்பற்றி வெற்றியில் பங்களிக்கும் வரை அதை சிறப்பாக உணருவேன்” என்று கூறி இருக்கிறார்.






