சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மிகச்சிறந்த வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் நிர்ணயிக்கப்பட்ட 250 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, வெறும் 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த வெற்றியின் காரணமாக முதல் அரையிறுதி சுற்றில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 ஸ்பின்னரக்ளுடன் களமிறங்கி ஆட்டத்தை மொத்தமாக கட்டுப்படுத்திவிட்டது.
அசத்திய தமிழக வீரர்
அதில் தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்களில் 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் வருண் சக்கரவர்த்திக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் வருண் சக்கரவர்த்தி இந்த ஆட்டத்தில் செய்த தவறு ஒன்றும் கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆட்டத்தின் 3வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அப்போது நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங்க் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ஒரு பந்தில் வேகத்தை முழுமையாக ஹர்திக் பாண்டியா குறைத்த போது, அதனை கணிக்காமல் வில் யங் வேகமாக பேட்டினை சுழற்றினார். இதனால் பேட்டின் அடிப்பகுதியில் பட்டு பந்து மேல் சென்றது.
வருண் சக்கரவர்த்தி தவறு
மிட் ஆன் திசையில் கேட்ச் செல்ல, அங்கிருந்த வருண் சக்கரவர்த்தி பின் நோக்கி ஓடினார். ஆனால் அந்த பந்து வருண் சக்கரவர்த்தியின் விரல்களில் அடித்து சென்றது. ஆனால் கேட்ச் பிடிக்கவில்லை என்றாலும் உடனடியாக பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கேட்ச் தவறவிட்ட போது, பந்து மீண்டும் ஒன் பிட்சாகியது.
அதனை தெரியாமல் வருண் சக்கரவர்த்தி உதைத்துவிட அந்த பந்து நேராக பவுண்டரியை கடந்தது. அதனை வருண் சக்கரவர்த்தியால் தடுக்க முடியவில்லை. இதனை பார்த்த ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி உள்ளிட்ட மூவரும் முகத்தில் விரல்களை வைத்து அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ ரசிகர்களிடையே பரவி வருகிறது.