இன்று இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக 302 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று இருக்கிறது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான துவக்கம் கொடுப்பவராக இருந்து வருகிறார். இன்றைய போட்டியிலும் முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்த அவர், அடுத்த பந்தில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார்.
இந்த நேரத்தில் இளம் வீரர் கில் விராட் கோலி உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 189 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். மேலும் 92 ரன்கள் குவித்து சதத்தை தவற விட்டு ஆட்டம் இழந்தார்.
உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்திற்கு சில நாட்களுக்கு முன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், முதல் இரண்டு போட்டிகளை தவறவிட்டார். தற்பொழுது 5 போட்டிகளை விளையாடு இருக்கும் அவர் இரண்டு அரைசதங்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.
இன்று தன்னுடைய உடல்நிலை மற்றும் இந்த போட்டி குறித்து பேசி உள்ள கில் கூறும் பொழுது “நான் எப்பொழுதும் பதற்றம் அடையாத ஒரு நபர். நான் போட்டியின் ஆரம்பத்தை என் சொந்த வழியில் சமாளிக்க விரும்புகிறேன். நான் தற்பொழுது முழு உடல் தகுதியில் இல்லை என்பதுதான் உண்மை. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நான் இப்பொழுது நான்கு கிலோ குறைந்து இருக்கிறேன்.
ஆடுகளம் விளையாடுவதற்கு கச்சிதமான முறையில் இருந்தது. சில பந்துகள் நன்றாக சீம் ஆகி வந்தன. எங்களுக்கு சரியான ஏரியாக்களில் அடிக்க முயற்சி செய்தோம். இப்படியான ஒரு ஆடுகளத்தில் நாம் செல்லுக்குள் பதுங்க முடியாது. நல்ல துவக்கம் வேண்டும் என்பதை நான் முந்தைய போட்டியிலிருந்து உணர்ந்து கொண்டேன்.
சில நேரங்களில் நாம் விளையாடும் நல்ல ஷாட் கூட ஃபீல்டரின் கைகளுக்கு நேராக பந்து செல்லும். இன்று நாங்கள் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது பற்றி மட்டுமே நினைத்தோம். சத்தியமாக இது 400 ரன்களுக்கான விக்கெட் என்று நாங்கள் நினைக்கவில்லை.
நாங்கள் 350 ரன்கள் எடுப்பதற்கு மிக முக்கிய காரணமாக ஸ்ரேயாஸ் இருந்தார். அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் முறையில் நாங்கள் விக்கெட்டை எதிர்பார்த்து இருந்தோம். சிராஜ் எப்பொழுதுமே பரபரப்பாக இருப்பார். அவர் எல்லா வேலைகளையும் எளிதாக்கிவிட்டார்!” என்று கூறியிருக்கிறார்!






