தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா ஏ அணியுடன் பயிற்சியாளராக வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன், இந்திய கிரிக்கெட் வீரா் குறித்து சில சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியா ஏ அணி, இந்தியா ஏ அணிக்கு எதிராக புதுச்சேரியில் நடைபெறும் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.
அடுத்து வரவிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கு ஆஸ்திரேலிய இளம் பிளேயர்களைத் தயார்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து டிம் பெயின் பேசும்போது “எங்கள் கேப்டன்சியின் போது விக்கெட்டை வீழ்த்துவதற்கு மிகவும் கடினமாக இருந்த இந்திய பேட்டர் செதேஷ்வர் புஜாரா தான். அவருடைய சிறப்பான கவனமும் மற்றும் கட்டுப்பாடுடன் கூடிய ஆட்டமும் விக்கெட்டை எடுப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர் எங்களை மிகவும் எரிச்சல் அடைய வைத்தார், நாங்கள் எப்படியாவது அவருடைய விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று மட்டுமே முயற்சி செய்து கொண்டிருந்தோம். இறுதியில் பாட் கம்மின்ஸ் தான் அவருக்கு எதிராக ஒரு வழியைக் கண்டுபிடித்து கீப்பர் கேட்ச் மூலம் விக்கெட்டை வீழ்த்தினார்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் ரிஷப் பண்ட் குறித்து டிம் பெயின் தொடர்ந்து பேசும்போது “அவர் ஆஸ்திரேலியாவிற்கு வந்து விளையாடிய விதம், அவருடைய அதிரடியான ஆட்டம் மற்றும் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைத்தான் இந்த இளம் பிளேயர்களிடம் நாங்கள் கொண்டு வர முயற்சிக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.