ஜப்பானில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச டி20 போட்டியில் மைதானத்தின் மோசமான பராமரிப்பு மற்றும் பிட்ச் அமைக்கப்பட்ட விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் சிரமப்பட்டு 5 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அடுத்து ஆடிய ஜப்பான் அணி கடைசி வரை போராடி 30 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
போட்டிக்கு முன்னதாக பெய்த கனமழையால் மைதானத்தில் ஈரம் அதிகரித்து ஆட்டம் தாமதமான நிலையில், அதை உலர்த்துவதற்கு நவீன உபகரணங்கள் மற்றும் சூப்பர் சோப்பர் வசதிகள் அங்கு இல்லாதது பெரும் பிரச்சனையாக அமைந்தது.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “ஆடுகளத்தைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. போட்டி மிக விரைவாகத் தொடங்கி முடிந்துவிட்டதால் அது ஒரு மங்கலான நினைவாக மாறியது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டை தூரத்து இடங்களுக்கு எடுத்துச் செல்ல விரும்பினால் இதுபோன்ற பிட்ச் அமைப்புகளில் போட்டிகளை நடத்த முடியாது. நிச்சயமாக இதைவிட சிறந்த பிட்ச் அமைப்புகளில் தான் ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டும். மழை பெய்யவில்லை என்றாலும் மைதானத்தை உலர்த்துவதற்கு உங்களிடம் சூப்பர் சோப்பர் அல்லது மைதானத்தை மூடும் வசதிகள் இல்லை. இங்கு நீங்கள் ஒரு சர்வதேச போட்டியை நடத்துகிறீர்கள் என்றால் இந்த வசதிகள் போதுமானதாக இல்லை, இதை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சரி செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இந்திய அணியின் நிலையை சுட்டிக்காட்டி அவர் தொடர்ந்து பேசும்போது “ஒரு கட்டத்தில் நாம் தோற்றுவிடுவோம் என்று தான் அனைவரும் நினைத்தோம். வெறும் ஜாலியாக விளையாடி சிரித்துப் பேசி ஜெயித்துவிடலாம் என்று நினைத்து வந்தோம். இந்திய அணியும் அதே போன்ற எண்ணத்துடன் தான் வந்ததாகத் தெரிந்தது. 5 ஓவர் போட்டிகள் மீது எனக்கு பெரிய விருப்பம் இல்லை என்றாலும், அன்றைய சூழ்நிலைக்கு அது ஓகே தான்” என்று கூறி இருக்கிறார்.