தொடரும் விராட் கோலியின் மோசமான ஆட்டம் ! கோலிக்கு நம்பிக்கை வார்த்தைகள் அளித்த பாபர் அசாம்

0
136
Babar Azam and Virat Kohli

இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தாண்டி உலக கிரிக்கெட் வட்டாரங்களில் மிக முக்கியமான பேசு பொருளாக விராட் கோலியின் பேட்டிங் பார்ம் மாறியிருக்கிறது. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு அவரது பேட்டிங் பார்ம் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைந்து மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது!

விராட் கோலியின் பேட்டிங் பார்ம் சரிந்திருக்கும் இந்த வேளையில் பல முன்னாள் வீரர்கள் அவர்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். பாகிஸ்தானின் முகமது ஆசிப், விராட்கோலி பாட்டம் ஹேன்ட் ப்ளேயர், இதற்கு உடல் நல்லமுறையில் ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒத்துழைக்காத காரணத்தாலே விராட் கோலி ஆட்டமிழக்கிறார். அவருக்கு வயதாகி விட்டதுதான் இதற்குக் காரணம் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் க்ரீம் ஸ்வான் கூறுகையில், விராட் கோலி உலகத்தரமான வீரர், இங்கிலாந்தாக இருந்திருந்தால் அவரை நீக்குவது பற்றியெல்லாம் பேசாமல், பத்திரமாகப் பாதுகாத்து இருப்போம் என்று பேசி இருந்தார்.

1983 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், நம்பர் 2 பவுலர் அஷ்வினை நீக்கும் பொழுது, நம்பர் 1 பேட்ஸ்மேன் விராட் கோலியை நீக்குவதில் எந்தத் தவறும் இல்லை என்றும், இது இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவும், அணியில் இடம் பெறுவதற்கான போட்டியை அதிகரிக்கும் என்று கூறியிருந்தார்.

1983 உலகக்கோப்பையை வென்ற அணியில் விளையாடி சுனில் கவாஸ்கரோ, ரோகித் சர்மா விளையாடாவிட்டால் கேள்வி எழுப்பாதவர்கள், விராட் கோலி விளையாடும் போது மட்டுமே கேள்வி எழுப்புவது ஏன் என்று புரியவில்லை என்று விராட் கோலிக்கு ஆதரவாகப் பேசியிருந்தார்.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது பி.சி.சி.ஐ-யின் தலைவருமான சவுரவ் கங்குலி, பேட்டிங் பார்ம் இழப்பு சச்சின், ராகுல் டிராவிட், எனக்கும் நடந்தே இருக்கிறது. இதுதான் விராட் கோலிக்கும் நடக்கிறது. இது விளையாட்டின் ஒரு அங்கம். விராட் கோலியின் எண்கள் சாதாரணமானதில்லை. அவற்றை திறமையும் தகுதியும் இல்லாமல் படைக்க முடியாது. விராட் கோலி கடினமான நேரத்தில் இருக்கிறார் என்று அவருக்குத் தெரியும். இதிலிருந்து வெளிவர அவர்தான் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பார்ம் ஏறும் இறங்கும். தரம்தான் நிரந்தரம். விராட் கோலி கடந்த பத்து வருடங்களில் நிறைய சாதித்திருக்கிறார். சில வருடங்களை வைத்து அவரை பார்க்க முடியாது. அவரின் முக்கியத்துவம் எங்களுக்குத் தெரியும் என்று கூறியிருந்தார்.

ஐ.பி.எல் தொடர் முடிந்து இங்கிலாந்தில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய விராட்கோலி டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் இருபது ரன்களை தாண்டவில்லை. டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் சேர்த்து 12 ரன்களே எடுத்தார். நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் நல்ல முறையில் ஆரம்பித்து ஆனால் வழக்கம் போல் வெளியே போகும் பந்தில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்த நிலையில் ரன் மெசின் விராட் கோலியோடு ஒப்பிடப்படும் பாகிஸ்தான் அணியின் ரன் மெசின் கேப்டன் பாபர் ஆசம் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில், தான் விராட் கோலியோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “இதுவும் கடந்து போகும். வலிமையாக இருங்கள் விராட் கோலி” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் இருநாட்டு கிரிக்கெட் இரசிகர்களாலும் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது!