“கடைசி ஓவர் நாலு பந்து நல்லா போட்டதும் ஹர்திக் பாண்டியா என்கிட்ட சொன்னது இதுதான்” – உண்மையை உடைத்த மோகித் சர்மா!

0
52975
Mohit

நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனின் இறுதிப்போட்டி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், பல முன்னாள் வீரர்களுக்கும் இதுவரை நடந்த இறுதிப் போட்டிகளில் மிகச் சிறந்த பரபரப்பான இறுதிப் போட்டியாக பதிவாகி இருக்கிறது!

முதலில் குஜராத் பேட்டிங் செய்கையில் ஐந்து, ஐந்து ஓவர்களாக ஆட்டம் முழுமையாக குஜராத் கைகளிலேயே இருப்பதாக தெரிந்தது. சாய் சுதர்சன் அதிரடியில் மிரட்டினார். அடுத்து சென்னை அணி பேட்டிங் செய்யும்பொழுது ஆட்டம் இரண்டு, இரண்டு ஓவர்களாக சென்னை அணியின் வசமாக வந்து கொண்டிருந்தது.

- Advertisement -

மோகித் சர்மாவின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியை அம்பதி ராயுடு அடிக்க மொத்தமாக ஆட்டம் சென்னை அணியின் பக்கமாக வந்துவிட்டது.ஆனால் அதே மோகித் சர்மாவின் ஓவரில் அம்பதி ராயுடு ஆட்டம் இழந்த அடுத்த பந்திலேயே மகேந்திர சிங் தோனியும் ஆட்டமிழக்க ஆட்டம் சமநிலையில் வந்து நின்றது.

இதற்கு அடுத்து 13 ரன்களை வைத்துக்கொண்டு மீண்டும் பந்து வீச வந்த மோகித் சர்மா முதல் நான்கு பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தந்து, கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் என்று ஆட்டத்தை 90% குஜராத் பக்கம் கொண்டு சென்று விட்டார்.

இந்த நிலையில் கடைசி இரண்டு பந்துகள் வீச இருக்கும் பொழுது கேப்டன் ஹர்திக் பாண்டியா அவரிடம் ஒரு சிறிய உரையாடலை நடத்தினார் ; இதற்கு அடுத்து மோகித் சர்மா வீசிய இரண்டு பந்திலும் சிக்ஸர் பவுண்டரி என விளாசி ஜடேஜா சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். ஹர்திக் பாண்டியா நடுவில் வந்து பேசியதால்தான் மோகித் சர்மா கவனம் சிதறி பந்து வீசினார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

- Advertisement -

தற்பொழுது இதற்கு பதில் அளித்து பேசி உள்ள மோகித் சர்மா ” நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தது. இதற்கு முன்பும் இது போன்ற சூழ்நிலைகளில் இருந்திருக்கிறேன். அதனால் எல்லா பந்துகளையும் யார்க்கராக வீச வேண்டும் என்கின்ற என் உள்ளுணர்வின் பக்கமாக நான் முடிவு செய்திருந்தேன்.

கடைசி இரண்டு பந்துகள் இருக்கும் பொழுது என்னிடம் வந்த ஹர்திக் பாண்டியா, நான் என்ன பந்துகள் வீச இருக்கிறேன் என்று மட்டுமே தெரிந்து கொள்ள நினைத்தார். நான் மீண்டும் யார்க்கர் வீசவே விரும்புகிறேன் என்று கூறினேன். ஆனால் தற்பொழுது மக்கள் அதை வேறு விதமாக பேசுகிறார்கள். ஆனால் வெளிப்படையாக இதுதான் நடந்தது.

நான் ஓடி வந்து அந்த நேரத்தில் மீண்டும் யார்க்கர் வீசவே விரும்பினேன். கவனம் செலுத்தி நான் என்னை நம்ப விரும்பினேன். ஐபிஎல் முழுவதிலும் நான் இதைச் சரியாகச் செய்திருந்தேன். பந்து வீச கூடாத இடத்தில் விழுந்தது அது சரியாக ஜடேஜாவின் பேட்டில் பட்டது. நான் முயற்சி செய்தேன்; என்னுடைய சிறந்ததை முயற்சி செய்தேன்.

என்னால் தூங்க முடியவில்லை. நான் அந்த பந்துக்கு பதிலாக என்ன வீசி இருக்க வேண்டும்? இந்த உணர்வு நன்றாகவே இல்லை. இதிலிருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன!” என்று கூறி இருக்கிறார்!