நாங்க சீக்கிரமா ஆஸ்திரேலியா வந்து முதலில் செய்த வேலை இதுதான் – உண்மையை உடைத்த அர்ஸ்தீப் சிங்!

0
10590
Arshdeep Singh

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சில் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர் ஜஸ்ட்பிரீத் பும்ரா. தற்போது இவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால், டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற முடியாமல் விலகினார்.

பும்ரா பந்துவீச்சில் ஒரு ஆட்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். இப்படிப்பட்ட ஒரு வீரரை உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடரில் இழப்பது கடினமானது. அதைவிடக் கடினமானது அவருக்கான ஒரு மாற்று வீரரை கொண்டு வருவது.

- Advertisement -

இப்படியான இக்கட்டான நிலையில் பும்ராவின் இடத்திற்கு வந்து, அந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு, பஞ்சாபைச் சேர்ந்த 23 வயதான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் மூலம் கண்டறியப்பட்ட மிகத் திறமையான வீரர்களில் இவரும் ஒருவர். 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக அடிப்படை விலையான இருபது லட்சத்திற்கு வாங்கப்பட்ட இவர், 2021 ஆம் ஆண்டு 12 போட்டிகளில் 18 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அப்பொழுது இவர் ஒரு ஓவருக்கு 8.27 ரன்கள் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு பஞ்சாப் அணி நான்கு கோடிக்கு இவரைத் தக்க வைத்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் 14 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினாலும், ஒரு ஓவருக்கு 7.70 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். குறிப்பாக கடைசிக் கட்ட ஓவர்களில் இவரது சிக்கனமான கட்டுக்கோப்பான பந்துவீச்சு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்தச் செயல்பாட்டால் இந்திய அணிக்குள் வந்த இவர், இந்த உலகக் கோப்பை தொடரில் மட்டும் நான்கு ஆட்டங்களில் ஒன்பது விக்கட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவர் பந்து வீசும் முறையை பேட்ஸ்மேன்கள் யாரும் கணிக்க முடியாது என்பது இவரது தனிப்பட்ட திறமையாக இருக்கிறது.

- Advertisement -

தனது பந்துவீச்சில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து பேசி உள்ள அர்ஸ்தீப் சிங் ” எனது கவனம் எப்பொழுதும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவதில் இருக்கிறது. சர்வதேச அளவில் உங்களால் அதிக லூஸ் பந்துகளை கொடுக்க முடியாது. புதிய பந்திலும் பழைய பந்திலும் நான் வீசும் பொழுது நன்றாக இருக்க விரும்புகிறேன். ஒன்று விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் அல்லது ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். இதுதான் எனது நோக்கம்” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நான் பந்து வீச ஓடிவரும் ரன் அப் முறையில் பராஸ் மாம்ப்ரே பணியாற்றினார். நான் பந்து வீச ஓடிவரும் பொழுது நேராக ஓடி வந்தால், எனது பந்து வீச்சு லைன் நிலையாக இருக்கும். ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் மோசமான லைனில் வீச முடியாது. அதனால் நான் நேராக வர முயற்சி செய்கிறேன். இந்த மாற்றத்தின் மூலம் என்னால் நல்ல முடிவுகளை பார்க்க முடிகிறது. நான் நன்றாக செயல்படுவேன்” என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சீக்கிரம் வந்து தாங்கள் என்ன செய்தோம் என்பது குறித்து பேசிய அவர் ” எங்கள் குழுவில் ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் வீசும் நீளம் ஒவ்வொரு மாதிரியாக இருந்தது. எனவே நாங்கள் முதலில் சரியான நீளத்தில் வீசுவதற்கு பயிற்சி செய்தோம். இதனால் நாங்கள் எந்த நீளத்தில் வீசினால் சரியான பவுன்ஸ் கிடைக்கிறது என்பதைக் கண்டறிந்தோம். நல்ல முன் தயாரிப்புகளின் மூலம் இப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்!