அனுஷ்காவுக்கு செஞ்சுரி சமர்ப்பணம் – விராட் கோலி உருக்கம்!

0
72

நான் இந்த செஞ்சுரியை அனுஷ்காவிற்கும் எனது குழந்தைக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று உருக்கமாக பேசினார் விராட் கோலி.

ஆசிய கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி ஏற்கனவே வெளியேறிவிட்டாலும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்பட்ட இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இம்முறை ரோகித் சர்மா ஓய்வு எடுத்துக் கொண்டார். அதனால் கேப்டனாக கேஎல் ராகுல் விளையாடினார்.

இந்த தொடரில் கே எல் ராகுல் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. ஆனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி 62 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். கோலி மற்றும் கே எல் ராகுல் ஜோடி 119 ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோலி மூன்று வருடங்கள் பிறகு தனது 71 வது சதத்தை பூர்த்தி செய்தார். 61 பந்துகள் பிடித்த இவர் 122 ரன்கள் விலாசினார். சூரியகுமார் யாதவ் 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பண்ட் 20 ரன்கள் அடித்தது இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த இந்தியா 212 ரன்கள் அடித்தது.

மிகப்பெரிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக ஜத்ரான் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 64 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 111 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதம் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட பிறகு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில்:

இன்றைய நாள் மிகவும் சிறப்பாக சென்றதை நான் வரவேற்கிறேன். போட்டியில் இருந்து சில நாட்கள் வெளியே இருந்தது என்னை நிறைய கற்றுக் கொள்ள வைத்தது. குறிப்பாக இந்த சதத்தை நான் அனுஷ்கா சர்மா மற்றும் எனது குழந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். என்னுடைய கடினமான காலத்தை அனுஷ்கா மிகச் சிறப்பாக கையாண்டார். எனக்காக பக்கபலமாக இருந்தார். ஒவ்வொரு தோல்வியிலும் எனக்கு அவர்தான் ஆறுதல் கூறி வந்தார். பல விமர்சனத்திற்கு பிறகும் என்னால் மீண்டும் நிதானமாக இருக்க முடிகிறது என்றால் அதற்கு அனுஷ்காவின் அரவணைப்பு தான் முக்கிய காரணம். இந்த தருணத்தில் எனக்கு பக்கபலமாக இருந்தவர்களை நான் நினைத்துக் கொள்கிறேன் என்று உருக்கமாக பேசினார்

மேலும் தனது பேட்டிங் குறித்து பேசி விராட் கோலி, நான் ஒவ்வொரு முறை 60 ரன்கள் அடித்த பிறகும் அவுட் ஆனதை கண்டு மிகவும் வருத்தப்பட்டு வந்தேன். எந்த இடத்தில் நான் தவறு செய்து கொண்டிருக்கிறேன் என்று எண்ணினேன். இருப்பினும் நான் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் பேட்டிங் செய்து வருகிறேன். நான் இவை அனைத்திற்கும் கடவுள் தான் காரணம் என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. இந்த தருணத்தில் நான் கடவுளுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் ஆனால் அன்றைய நாள் இறுதியில் உங்களுக்கு எது மனஉறுதி தருகிறது மற்றும் நீங்கள் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டுமே முக்கியம் எனக்கு மிகச் சிறப்பான இரண்டு ஆதரவாளர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.