கிரிக்கெட்

அது கேஎல் ராகுல் இல்லை.. வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்தான் – ரோகித் சர்மா பேட்டி!

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை நான்கு விக்கெடுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் யார் என்று போட்டி முடிந்த பிறகு பேசியுள்ளார் ரோகித் சர்மா.

- Advertisement -

ஈடன் கார்டன் மைதானத்தில் இலங்கை அணியுடன் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தாலும் அவர்களால் அதை நல்ல ஸ்கோர் ஆக பினிஷ் செய்ய முடியவில்லை.

ஒரு கட்டத்தில் 100 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது. அடுத்த 115 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து மொத்தம் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அறிமுக வீரர் நுவனிடு பெர்னாண்டோ 50 ரன்கள் அடித்தார். இந்திய அணிக்கு அதிகபட்சமாக சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்ததாக பேட்டிங் செய்த இந்திய அணியை தங்களது பந்துவீச்சு மூலம் இலங்கை அணி திணறடித்தனர். 86 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது ஹர்திக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்து 75 ரன்கள் சேர்த்தனர்.

- Advertisement -

அதன்பின் இந்திய அணி இலக்கை எட்டுவதற்கு அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் இருவரும் உதவ, இறுதிவரை ஆட்டமிழக்காமல் பொறுப்புடன் விளையாடி வெற்றியை உறுதி செய்தார் கேஎல் ராகுல். இவர 103 பந்துகளில் 64 ரன்கள் அடித்திருந்தார். 215 ரன்கள் இலக்கை கடந்து இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா கூறுகையில், “கே.எல் ராகுல் ஐந்தாவது இடத்தில் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். ஆகையால் அவருக்கு 5வது இடத்தில் நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. கேஎல் அந்த இடத்தில் களம் இறங்குவதால், டாப் 3 பேட்ஸ்மேன்கள் எந்தவித அழுத்தமும் இன்றி தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு உதவுகிறது.

இந்த போட்டியில், ஒரு கட்டத்தில் இலங்கை அணி பந்துக்கு சமமாக ரன்களை அடித்து வந்தனர். அவர்களை கட்டுப்படுத்த திணறியபோது, உள்ளே வந்த குல்தீப் யாதவ், அபாரமாக பந்து வீசி ஆட்டத்தின் போக்கை இந்தியாவின் பக்கம் திருப்பினார். கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்து வருகிறார். குல்தீப் மீது அணி நிர்வாகம் அதீத நம்பிக்கையை கொண்டிருக்கிறது. இதுபோன்று பலமுறை இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்.” என பேசினார்.

Published by