ஐபிஎல் தொடரில் இருந்து கவனம் ஈர்த்து இந்திய அணிக்குள் வந்த பந்துவீச்சாளரில் மிக முக்கியமானவர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங்.
ஐபிஎல் தொடரில் கூர்மையான யார்க்கர்களால் கவனிக்கப்பட்ட இந்த இளம் வீரர் இந்திய அணிக்குள் அடுத்த இரண்டு வருடங்களில் உள்வாங்கப்பட்டார். ஆரம்பத்தில் இவருடைய பவுலிங் மிகச் சிறப்பாக அமைந்தது.
இவரால் இரண்டு பக்கம் பந்தை ஸ்விங் செய்ய முடிவது பெரிய பலமாகவும் இருந்தது. ஆனால் இதைத் தாண்டி இவர் திடீரென ரன்கள் கொடுக்க ஆரம்பித்தார். காரணம் இவர் பெரும்பாலும் யார்க்கர்கள் வீசப் போகிறார் என்பது பேட்மேன்களுக்கு தெரிந்து விட்டது, அடுத்து இவர் பந்து வீச ஓடி வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் இவரது பவுலிங் ரிதம் பாதிக்கப்பட்டது.
இதை சரி செய்து கொள்ள இவர் தனது பந்துவீச்சில் யார்க்கர்கள் தாண்டி சில விஷயங்களை கற்று முயற்சி செய்ய வேண்டி இருந்தது. அடுத்து இவர் ஓடிவரும் தூரத்தை மாற்றி அமைத்து ரிதத்தை மீண்டும் பெற வேண்டி இருந்தது. இதையெல்லாம் தற்பொழுது சரி செய்து பெண் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 5 விக்கெட் கைப்பற்றி நம்பிக்கை கொடுத்தார். தற்போது டி20 உலகக் கோப்பைக்குச் செல்லக்கூடிய வீரராகவும் பார்க்கப்படுகிறார்.
கடந்த ஒரு வருட கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசிய அர்ஸ்தீப் சிங் “கடந்த 12 மாதங்களில் கலவையான அனுபவங்கள் கிடைத்தது. மேலும் கீழும் ஆக இருந்தன. சில நல்ல நிகழ்வுகளும் அமைந்தது. நான் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டேன். இது எல்லாம் சேர்த்து என் செயல்பாட்டை நடுநிலையாக்கியது.
குறிப்பாக நான் சமீபத்தில் புதிய பந்தில் பந்துவீச்சை தொடங்கினேன். குறிப்பாக மெதுவான ஆடுகளங்களில் இதைச் செய்தேன். இதனால் எனது பந்து வீட்டில் சில வேரியேஷன்கள் கொண்டு வந்தேன். குறிப்பாக இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அதை பயன்படுத்தினேன். அது வேலை செய்தது எனக்கு நம்பிக்கையை அதிகரிக்கிறது. இல்லையென்றால் நான் எனது திறமையை கூர்மைப்படுத்த இன்னும் உழைப்பேன்.
அணியில் எல்லா வீரர்களுக்கும் ஒரு ரோல் இருக்கிறது. ஒரு பந்துவீச்சாளராக நீங்கள் தொடக்கம் மற்றும் நடுவில் பந்து வீச வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். உங்களுக்கு இந்த தெளிவு இருக்கும்பொழுது நீங்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.
சின்னசாமி மைதானத்தைப் பொறுத்தவரை இழப்பதற்கு என்று எதுவும் கிடையாது. இங்கு நிறைய பவுண்டரிகள் அடிக்க வேண்டும் என்கின்ற அழுத்தம் பேட்ஸ்மேன்களுக்குத்தான் இருக்கிறது. இதனால் ஒரு பந்துவீச்சாளரான நாம் ஆட்டத்திற்குள் இருக்கிறோம். இதனால் இங்கு நம்மால் விக்கெட்டுகளை பெற முடியும்” என்று கூறியிருக்கிறார்.