தற்பொழுது இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் ரஷீத் கான் முதுகில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் காரணமாக விளையாடவில்லை. ஆனால் அவர் அணியுடன் தொடர்ந்து இணைந்திருக்கிறார்.
இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்கார இப்ராஹிம் ஜட்ரன் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டி இன்று பஞ்சாப் மொகாலியில் நடைபெற்றது.
டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 23 மற்றும் கேப்டன் இப்ராஹிம் ஜட்ரன் 28 இருவரும் நாகரிகமான துவக்கம் தந்தார்கள். அடுத்து ஓமர்சாய் 29, முகமது நபி 42 ரன்கள் எடுக்க, ஐந்து விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 158 ரன் சேர்த்தது.
இதற்கடுத்து விளையாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், கில் 23, திலக் வர்மா 26, ஜிதேஷ் 31, ரிங்கு சிங் 19, சிவம் துபே 60 ரன்கள் எடுக்க, இந்திய அணி மிக எளிதாக இலக்கை எட்டி 17.3 ஓவர்களில் அபாரமாக வெற்றி பெற்றது.
இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்தில் விக்கெட் இழப்பில்லாமல் 50 ரன்கள் கிடைத்த போதிலும், இதற்கு அடுத்து ரன் ரேட்டை உயர்த்த வேண்டிய நேரத்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்து விட்டது. இது மட்டும் இல்லாமல் ஃபீல்டிங்கின் போது பனி பெய்த காரணத்தினால் சரியாக செயல்பட முடியாததும் பின்னடைவாக அமைந்தது.
தோல்விக்கு பின் பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் “நாங்கள் 30 முதல் 40 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். மேலும் துரதிஷ்டவசமாக டாசிலும் தோற்று விட்டோம். ஆனாலும் எங்கள் வீரர்கள் நன்றாகவே போராடினார்கள். நாங்கள் பவர் பிளேவில் ஒரு நல்ல தொடக்கத்தை பெற முயற்சி செய்தோம். ஆனால் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.
எங்களின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் 14 முதல் 15 ஓவர்கள் வரை விளையாடியிருக்க வேண்டும். விக்கெட் விழுந்து அந்த நேரத்தில் புதிய பேட்ஸ்மேன்கள் வந்ததால் அழுத்தம் உருவானது.
பனி இருந்த காரணத்தினால் பந்தை பிடிப்பது கடினமாக இருந்தது. இருந்தாலும் வீரர்கள் சிறப்பாக முயற்சி செய்தார்கள். நாங்கள் எங்களுடைய பில்டிங்கை மேம்படுத்த வேண்டும். இன்று நாங்கள் பீல்டிங்கில் மிகவும் சோம்பேறியாக இருந்தோம். மேலும் பேட்டிங்கை மேம்படுத்த வேண்டும். பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக இருக்கிறோம். நாங்கள் இன்று செய்த தவறுகளில் கவனம் செலுத்துவோம்” என்று கூறியிருக்கிறார்!