இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் இந்நாள் வீரருமான நிரோஷன் டிக்வெல்லாவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக தடை விதித்திருக்கிறது. தற்போது இதற்கான காரணங்கள் குறித்து வெளியில் தெரிய வந்திருக்கிறது.
இலங்கை அணியின் 31 வயதான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லா இலங்கை தேசிய அணிக்காக முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அறிமுகமானார். அதே ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராகவும், டி20 கிரிக்கெட்டில் 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராகவும் அறிமுகம் ஆனார்.
இவர் மொத்தம் இலங்கை தேசிய அணிக்காக 55 ஒரு நாள் போட்டிகள், 51 டெஸ்ட் போட்டிகள், 28 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக சேர்த்து 4700-க்கும் பக்கமான ரன்கள் அடித்திருக்கிறார். கடந்த வருடம் மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடியிருக்கிறார்.
மேலும் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக்கில் காலை மார்வெல்ஸ் அணிக்கு கேப்டனாகவும் இருந்து வருகிறார். இந்த வருடம் இவருடைய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்த தொடரில் இவருக்கு ஊக்க மருந்து பரிசோதனை செய்யப்பட்ட பொழுது போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிய வந்திருக்கிறது.
இதன் காரணமாக விசாரணை முடியும் வரையில் இவருக்கு ஒட்டுமொத்தமாக இலங்கை கிரிக்கெட்டில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவரால் இலங்கைக்குள் பயிற்சி போட்டிகளில் கூட விளையாட முடியாது. இதன் காரணமாக இவரால் வெளிநாடுகளில் டி20 லீக்குகளில் பங்கேற்கவும் முடியாது.
இதையும் படிங்க : மோசமான அந்த சம்பவத்துக்காக.. ஒவ்வொரு 2 நிமிஷத்துக்கும் அழுவேன் – பிளின்டாப் வெளியிட்ட தகவல்
இதேபோல் கோவிட் காலத்தில் விதிமுறைகளை மீறியதற்காக இவருக்கு ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மிக மோசமான விஷயத்திற்காக தடை வாங்கி இருக்கிறார். தற்பொழுது 31 வயதாகும் இவருக்கு அநேகமாக இந்த விஷயம் உறுதியாகிவிட்டால் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. இவர் இலங்கை வெள்ளை பந்து அணிக்கு ஒரு முறை கேப்டன் ஆகவும் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது!






