இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபிக்கான மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டது ஏன் என மும்பை மாநில கிரிக்கெட் சங்க அதிகாரி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
மும்பை மாநில ரஞ்சித் டிராபி அணியில் இருந்து நீக்கப்பட்ட பிருத்வி ஷா, பிறகு மீண்டும் சையத் முஸ்தாக் அலி தொடருக்கான மும்பை அணியில் சேர்க்கப்பட்டார். மும்பை மாநில அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் விஜய் ஹசாரே தொடரில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
ஒழுக்கமின்மைதான் முக்கிய காரணம்
இது குறித்து பெயரிட விரும்பாத மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரி தெரிவிக்கும் பொழுது “பீல்டிங் செய்யும் பொழுது பந்து அவருக்கு அருகில் சென்றால் அந்த பந்தை பிடிப்பதற்கு அவர் எந்த முயற்சியும் செய்ய மாட்டார். பேட்டிங்கிலும் பந்தை எட்டுவதற்கு அவர் மிகுந்த சிரமப்பட்டார். அவருடைய உடல் தகுதி, ஒழுக்கம் மற்றும் அணுகுமுறை எல்லாம் குறைவாகவே இருந்தது. நாங்கள் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதியை வைத்திருக்க முடியாது”
“பிரித்வி ஷாவின் சமூக வலைதள பதிவுகள் தேர்வாளர்களையோ அல்லது மும்பை மாநில கிரிக்கெட் சங்கத்தையோ எந்த விதத்திலும் திசை திருப்ப முடியாது. அவர் விளையாட்டை முன்னேற்றிக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். சமூக ஊடகத்தில் அனுதாபத்தை பெற முயற்சி செய்யக் கூடாது” என்று கூறி இருக்கிறார்.
ஹோட்டல் அறைக்கு தாமதமாக வந்தது
மேலும் சையத் முஸ்தாக் அலி தொடரின் போது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பயிற்சி அமர்வுகளுக்கு தனித்திட்டங்களை வைத்திருந்ததாகவும், ஆனால் ஹோட்டலை விட்டு வெளியேறும் பிரித்வி ஷா அடுத்த நாள் காலையில் திரும்பி பயிற்சி அமர்வுகளை தவறவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் மும்பை மாநில சங்கம் அவருக்கு உடல் தகுதிக்காக அமைத்துக் கொடுத்த பயிற்சி அமர்வுகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பும்ரா ரிஷப் பண்ட்டை விட.. எங்க பாகிஸ்தான் இந்த 2 பிளேயர்ஸ் தான் எப்பவும் பெஸ்ட் – அகமத் சேஷாத் பேட்டி
இது குறித்து பேசி இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் “பிரித்வி ஷா தொழில் தர்மத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அவருக்கு இந்த வானம்தான் எல்லை. அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார், அவர் குழந்தை கிடையாது. சில விஷயங்களை நம்மால் ஒருவருக்கு வற்புறுத்தி சொல்ல முடியாது” என்று நாகரிகமான முறையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






