இந்திய அணி நேற்று ஆசியக்கோப்பை இரண்டாவது சுற்றுக் கடைசிப் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விறுவிறுப்பான போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி எந்தவித தாக்கத்தையும் தொடரில் ஏற்படுத்தாது!
நேற்று பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு முதலில் விளையாடி 265 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இந்த நிலையில் இறுதி கட்டத்தில் வந்த அக்சர் படேல் தவிர, ஒரு முனையில் நிலைத்து நின்ற சுப்மன் கில்லுக்கு நல்ல ஒத்துழைப்பு தரவில்லை. ஆனாலும் அவர் தனி ஒரு வீரராக போராடி அணியை இலக்கை நோக்கி கொண்டு வந்தார்.
மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 133 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 121 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த பந்தை அடித்திருக்க தேவையில்லை என்கிற சூழல்தான் இருந்தது. ஆனால் அனுபவக் குறைவால் அவர் ஆட்டம் இழக்க அது அணியின் வெற்றியை பாதித்து விட்டது.
இதுகுறித்து தற்பொழுது பேசியுள்ள சுப்மன் கில் “நீங்கள் பேட்டிங் செய்யும்பொழுது நிறைய அட்ரினல் உள்ளது. சில நேரத்தில் நீங்கள் தவறாக கணக்கிடுகிறீர்கள். நேற்று என் பக்கத்தில் அப்படித்தான் நடந்தது. ஆனால் நீங்கள் ஆட்டம் இழந்து வெளியே செல்லும் பொழுது, ஆட்டத்தில் இன்னும் நேரம் இருப்பதை பார்க்கிறீர்கள்.
நான் சாதாரணமாக பேட்டிங் செய்திருந்தால், ஆக்ரோஷம் காட்டாமல் இருந்திருந்தால், நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்ற இருக்க முடியும். ஆனால் இவைதான் கற்றல். அதிர்ஷ்டவசமாக இந்த ஆட்டம் எங்களுக்கு இறுதிப் போட்டி இல்லை. ஒரு பேட்ஸ்மேனாக நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதை எடுத்து என்னை மேம்படுத்திக் கொள்கிறேன்.
மெதுவான விக்கெட்டில் டாட் பந்துகளை குறைத்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது எங்கள் நோக்கமாக இருந்தது. இந்த விக்கெட்டில் சிங்கிள் எடுப்பது எளிதானது கிடையாது. குறிப்பாக புதிய பேட்டர்களுக்கு. இப்படியான விக்கெட்டில் ஸ்கொயரில் விளையாடுவது சரியாக இருக்கும். எனவே பொதுவாக நாங்கள் அப்படி ஒரு திட்டம் செய்தோம். முடிந்தவரை பந்தை தாமதமாக விளையாடுவதே எங்கள் நோக்கமாக இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!