தற்போதைய ஆஸ்திரேலியா அணி சிறந்த அணி இல்லை என்று வெளிப்படையாக அந்த அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் ஏற்றுக்கொண்டு பேசியிருக்கிறார்.
இலங்கை நாட்டிற்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தற்பொழுது ஆஸ்திரேலியா அணி சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.
ஸ்டீவ் வாக் மற்றும் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா அணி அசைக்க முடியாத அணியாக உருவெடுத்திருந்தது. அவர்கள் எந்த நாட்டிலும் சென்று எல்லா வகையான வடிவத்திலும் கிரிக்கெட் தொடர்களை கைப்பற்றும் வலிமையுடன் இருந்தார்கள். ஆனால் தற்போதைய ஆஸ்திரேலியா அந்த காலகட்ட அணியைப் போல வலிமையாக இல்லை என நாதன் லயன் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நாதன் லயன் பேசும்பொழுது “எனக்கு இன்று தனிப்பட்ட முறையில் சில விஷயங்கள் இருக்கின்றன. நாங்கள் இந்திய அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெறவில்லை. மேலும் நாங்கள் ஆசஸ் தொடரை இரண்டு முறையாக தக்க வைக்க மட்டும் செய்திருக்கிறோம். எனவே தற்போது என்னுடைய தனிப்பட்ட எண்ணத்தின் படி நாங்கள் ஒரு சிறந்த அணியாக மாறிவிடவில்லை”
“அதே சமயத்தில் எங்களுக்கு சில சிறந்த வீரர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் கடந்து இருக்கிறார். மேலும் எங்களுடைய ஓய்வறையில் ஸ்டார்க் போன்ற மிகச்சிறந்த பந்துவீச்சாளர் இருக்கிறார். எங்களிடம் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் ஒரு சிறந்த அணியாக மாறுவதற்கான சிறப்பான பயணத்தில் இருக்கிறோம். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பது நம்ப முடியாத அளவுக்கு மகிழ்ச்சியானது”
இதையும் படிங்க : என் வாழ்நாளில் முதல் முறை.. அபிஷேக் ஷர்மா எதிர்காலத்தில் இத செய்யறத பார்க்கணும் – கெவின் பீட்டர்சன் பேட்டி
“மேலும் தற்போது அணியில் இல்லாத வீரர்களிலும் சிறந்தவர்கள் இருக்கிறார்கள். தற்போது தனிப்பட்ட காரணங்களால் விளையாடாமல் இருக்கும் கேப்டன் கம்மின்ஸ் இருக்கிறார். இப்படி அணிக்கு உள்ளே வெளியே என சிறந்த வீரர்கள் பலர் இருக்கிறார்கள். நாங்கள் ஒரு சிறந்த அணியாக மாறுவதற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.