இன்று டி20 உலகக்கோப்பையில் இலங்கை மற்றும் நேபால் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கும் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் பரிதாபமான முறையில் நடப்பு 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறியிருக்கிறது.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், நெதர்லாந்து, நேபாள் மற்றும் இலங்கை என ஐந்து அணிகள் இடம்பெற்று இருந்தன. நேபால் அணியை தவிர்த்து மற்ற நான்கு அணிகளும் சமமான போட்டியை கொடுக்கக்கூடிய அணிகள் என்பதால், இந்தப் பிரிவு நடப்பு உலகக்கோப்பையில் கடினமான பிரிவாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை அணி தன்னுடைய முதல் இரண்டு போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளிடம் தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் தன்னுடைய முதல் போட்டியில் இலங்கை அணியை வென்று, இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் வெல்ல வேண்டிய நிலையில் இருந்து தோல்வியடைந்தது. இதன் காரணமாக இலங்கை அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு கொஞ்சம் உருவானது.
இலங்கை அணி தன்னுடைய அடுத்த இரண்டு போட்டிகளான நேபாள் மற்றும் நெதர்லாந்து அணிகளை நல்ல ரன் ரேட்டில் வென்று, பங்களாதேஷ் அணி தன்னுடைய இரண்டு போட்டியில் ஒன்றைத் தோற்கும் பொழுது, இலங்கை அணிக்கு அடுத்த சுற்றுக்கான ஒரு வாய்ப்பு இருந்தது.
இப்படியான சூழலில் இன்று நேபாள் அணிக்கு எதிராக இலங்கை அணி விளையாட இருந்த போட்டி மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக இலங்கை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு 99% முடிவுக்கு வந்துவிட்டது. இது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது.
இதையும் படிங்க : 5 ஓவரில்.. ஆட்டத்தை முடித்த ஆஸ்திரேலியா.. 9 பேர் ஒற்றை இலக்கம்.. நமீபியா வெளியேறியது
தற்போது பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மழையால் கைவிடப்பட வேண்டும். இதற்கு அடுத்து பங்களாதேஷ் அணி நேபாள் அணியிடம் படுதோல்வி அடைய வேண்டும். அடுத்து இலங்கை அணி பெரிய ரன் ரேட்டில் நெதர்லாந்து அணியை வெல்ல வேண்டும். இந்த மூன்று விஷயங்களும் நடந்தால் மட்டுமே இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.






