நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இரண்டு அதிரடியான மாற்றங்களுடன் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தொடரின் முதல் போட்டி வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூர் மைதானத்தில் நடைபெறுகின்றது. இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி மகாராஷ்டிரா புனே மைதானத்தில் நடக்கிறது. மூன்றாவது போட்டி நவம்பர் 1ஆம் தேதி மும்பை மைதானத்தில் நடைபெறுகிறது.
மீண்டும் அறிவிக்கப்பட்ட துணை கேப்டன் பதவி
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் துணை கேப்டன் பதவி காலியாக விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்தப் பதவியில் ஏற்கனவே இருந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு மீண்டும் அந்த பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா ஒரு போட்டி விளையாட முடியாமல் போகும் என்ற தகவல் வெளியாகிறது. இதன் காரணமாகவே தற்போது துணை கேப்டனை அறிவித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. எனவே ஆஸ்திரேலியாவில் ரோஹித் சர்மா இல்லாத பொழுது பும்ரா இந்திய அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.
அதிரடியாக நீக்கப்பட்ட இளம் வீரர்
இந்திய டெஸ்ட் அணியில் இடதுகை வேகப் பந்துவீச்சாளருக்காக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும் யாஸ் தயாலை பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இணைத்து இருந்தார்கள். இந்த நிலையில் அவரை அதிரடியாக தேர்வுக் குழு கழட்டிவிட்டு இருக்கிறது.
மேலும் பங்களாதேஷ் அணிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த அதே அணியை தொடர்கிறது. தற்போது ஒரு வேகப்பந்து வீச்சாளரை வெளியில் விட்டிருப்பதை பார்க்கும் பொழுது, நியூசிலாந்து அணிக்கு எதிராக சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து, இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் உடன் செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி:
ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா (து.கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (வி.கீ), துருவ் ஜூரல் (வி.கீ), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்.






