இப்படியொரு டி20 ஆட்டத்தை இதற்குமுன் நான் பார்த்ததே இல்லை – ஸ்கை பேட்டிங்கை புகழ்ந்த நியூசி.,வீரர்!

0
1161

இப்படி ஒரு டி20 ஆட்டத்தை இதற்கு முன்னர் லைவில் பார்த்ததில்லை என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் டேரல் மிச்சல்.

நியூசிலாந்து சென்றிருக்கும் இந்திய அணி, முதல் கட்டமாக நடைபெற்ற மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. அதில் முதல் மற்றும் மூன்றாவது என இரண்டு போட்டிகள் மழை காரணமாக ரத்து ஆனது.

இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது.

இரண்டாவது டி20 போட்டியின் போது இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் விலாசினார். இதன் மூலம் டி20 அரங்கில் தனது இரண்டாவது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். இவரின் இந்த அதிரடியான ஆட்டத்தை பலரும் புகழ்ந்து இருக்கின்றனர்.

நியூசிலாந்து வீரர்கள் கேன் வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ் உட்பட சில எதிரணி வீரர்களும் பெருமிதமாக பேசினார். அந்த வகையில் தற்போது மற்றொரு நியூசிலாந்து வீரர் டேரல் மிச்சல் சூரியகுமார் யாதவ் பேட்டிங் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.

“நான் நினைத்ததை விட மிகச் சிறப்பான வீரராக இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளின் போது அவருக்கு நான் பவுலிங் செய்ததை பெருமிதமாக கருதுகிறேன். தனிப்பட்ட முறையில், நான் நேரில் பார்த்ததில் இவர் ஆடியது தான் மிகச் சிறப்பான பேட்டிங் என்று கருதுகிறேன். இப்படி ஒரு டி20 ஆட்டத்தை இதற்கு முன்னர் நான் கண்டதே இல்லை.

ஐபிஎல் போட்டிகளின் மூலம் பல வீரர்கள் சர்வதேச தரத்தில் இருக்கின்றனர். எந்த ஒரு அணியையும் வீழ்த்தும் அளவிற்கு இளம் வீரர்களையும் அனுபவிக்க வீரர்களையும் அணியில் வைத்திருக்கின்றனர். சிறப்பான ஃபார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவின் பேட்டிங் எளிதில் எதிரணியிடமிருந்து ஆட்டத்தை பறித்துக் கொள்கிறது.” என்றும் பேசினார்.