தற்போது அமெரிக்காவின் டி20 தொடரான மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பரபரப்பான போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் நியூயார்க் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்ற நிலையில் தற்போது அமெரிக்காவில் டி20 தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் முதல் போட்டியில் ஐபிஎல் தொடரில் பிரபலமான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன் சனிகளுக்கு சொந்தமான இரண்டு அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூயார்க் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த கான்வே 44 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 65 ரன்கள் குவித்தார். கேப்டன் பாப் டு பிளேசிஸ் 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து பேட்டிங் வரிசையில் ஏழாவதாக வந்த சாவேஜ் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்தார். டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. மைக்கேல் பிரேஸ்வெல் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மோனன்க் படேல் 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 62 ரன்கள் எடுத்தார். மைக்கேல் பிரேஸ்வெல் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பூரன் 6 பந்தில் 6 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ஒரு முனையில் அதிரடி காட்டிய பொல்லார்டு பெரிய நம்பிக்கையை கொடுத்தார். மூன்று ஓவர்களுக்கு கடைசியில் 26 ரன்கள் தேவைப்பட்டது. பொல்லார்டு 16 பந்தில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலட்சியமாக ரன் ஓடி டேரில் மிட்சலால் ரன் அவுட் செய்யப்பட்டார். இது மும்பை இந்தியன்ஸ் அணியை தோல்விக்கு தள்ளியது.
இதையும் படிங்க: விராட் கோலி, சச்சின், டிராவிட் மாதிரி.. இனி இந்திய அணியை இந்த வீரர்தான் தாங்குவார் – அவரது சிறுவயது கோச் பேட்டி
கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணியால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி நியூயார்க் மும்பை இந்தியன்ஸ் அணியை பரபரப்பான போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆடம் மில்னே மூன்று விக்கெட் கைப்பற்றினார்.