டி20 உலக கோப்பை 2024.. தகுதி பெற்ற உகாண்டா.. மொத்தம் 20 நாடுகள்.. எப்படி நடைபெறுகிறது? – முழு விபரங்கள் உள்ளே!

0
3893
T20i

தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத்தொடர் இந்தியாவில் நடைபெற்று முடிவடைந்திருக்கிறது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது.

கடந்த முறை நடைபெற்ற ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பையில் முதலில் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் எட்டு அணிகள் போட்டியிட்டன. இதிலிருந்து இரண்டு அணி தேர்வு செய்யப்பட்டது.

- Advertisement -

மேற்கொண்டு பத்து அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றது. இதற்கு அடுத்து சூப்பர் 12 சுற்றில் 12 அணிகள் விளையாடியது. இதில் தலா ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன. இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. பிறகு அதிலிருந்து இறுதிப் போட்டி நடைபெற்றது.

தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதற்கு முன்பாகவே தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று முடிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜிம்பாப்வே அணி வெளியேறியிருக்கிறது. ஆச்சரியம் அளிக்கும் விதமாக உகாண்டா அணி தகுதி பெற்று இருக்கிறது.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கு பெறுகின்றன. கடந்த முறை கலந்து கொண்ட அணிகளில் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகளும், தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் மீதம் இரண்டு அணிகளும், என மொத்தம் பத்து அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

- Advertisement -

இந்த நிலையில் மீதி பத்து இடங்களுக்கான போட்டியில் அமெரிக்காவில் இருந்து கனடாவும், ஆசியாவில் இருந்து நேபாள் மற்றும் ஓமனும், கிழக்கு ஆசியா பசுபிக்கில் இருந்து பப்புவா நியூ கினியா அணியும், ஐரோப்பாவில் இருந்து அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும், ஆப்பிரிக்காவில் இருந்து நமிபியா மற்றும் உகாண்டா என எட்டு அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன.

இதன் மூலம் மொத்தம் 18 அணிகள் வந்திருக்கின்றன. மேலும் டி20 உலகக் கோப்பையை நடத்துகின்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணிகள் நேரடியாக தகுதி வருகின்றன. இதன் மூலம் 20 அணிகள் விளையாடுகின்றன.

இந்த 20 அணிகளும் தலா ஐந்து அணிகளாக நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. இந்த நான்கு பிரிவுகளிலும் உள்ள ஐந்து அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் மோதுகின்றன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு தயாராகின்றன.

அடுத்த சுற்றுக்கு முன்னேறும் எட்டு அணிகளும் தலா 4 அணிகள் வீதமாக இரண்டுகுழுக்களாக பிரிக்கப்படுகின்றன. இரண்டு குழுக்களிலும் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் அணிகள், அதிலிருந்து ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இதன் மூலம் இறுதி போட்டி நடைபெறும்!