தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் பிறந்த தங்கராசு நடராஜன் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் மிகச் சிறப்பாக விளையாடி பின் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டி என மூன்று பார்மெட்டிலும் தன்னுடைய திறமையை நிரூபித்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கூட அவரது விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பின்னர் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் இரண்டு போட்டிகளில் விளையாடி முடித்த அவருக்கு காலில் மிகப் பெரிய காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்ததால் அறுவை சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். பின்னர் பிற்பாதி ஐபிஎல் தொடரிலும் அவர் களமிறங்கி விளையாடவில்லை.
நீண்ட மாதங்களாக ஓய்வு எடுத்து வரும் அவர் தனது உடல்நிலை குறித்து தற்போது பிரத்தியேகமாக ஒரு பேட்டி அளித்துள்ளார்.
ரஞ்சி டிராபி மற்றும் ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறேன்
எனது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. நான் விளையாட தயாராகி விட்டேன். தற்பொழுது எனது உடலை நான் தயார்படுத்தி வருகிறேன் என்றும் கடுமையான பயிற்சியை நான் தற்பொழுது மேற்கொண்டு வருகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் இந்த வருடம் நடக்க இருக்கும் ரஞ்சி டிராபி மட்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று தன்னுடைய சிறந்த பங்களிப்பை தனது அணிக்கு வழங்க தயாராக இருக்கிறேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடர் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை ஒரு பாதியாகவும் பின்னர் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இரண்டாம் பாதியாகவும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இடைப்பட்ட ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஐபிஎல் நடைபெற இருக்கிறது.
மேற்கூறியபடி நடராஜன் அடுத்த மாதம் முதல் ஜூலை மாதம் வரை ரஞ்சி டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் மாறி மாறி விளையாடப் போகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் இரஞ்சி டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவதன் அடிப்படையில், இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை டி20 தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கராசு நடராஜன் மிக சிறப்பாக விளையாடி உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று வேண்டும் என்பதே தற்போது அனைத்து தமிழக ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.