சில தினங்களுக்கு முன்பாக சாம்பியன்ஸ் ட்ராஃபியில் விளையாடப் போகும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் டி20 அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் அதில் இடம்பெறவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெறாதது குறித்த சூரியகுமார் யாதவ் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அறிவிக்கப்பட்ட இந்திய அணி
டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆக திகழும் சூரியகுமார் யாதவ் தற்போது கேப்டனாகவும் இந்திய அணிக்கு இளம் வீரர்களை வைத்து சிறப்பான வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் இவரது தலைமையில் முன்னணி அணியான தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழும் இவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதற்கு நேர்மாறாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கடைசியாக சூரியகுமார் யாதவ் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் விளையாடினார். அதற்குப் பிறகு சுமார் ஒரு வருட காலமாக இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அவர் இடம்பெறாதது சிறிய ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் அது குறித்து சூரியகுமார் யாதவ் சில நியாயமான கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.
இந்த உண்மையை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம்பெறாதது குறித்து எனக்கு ஏன் வலிக்க வேண்டும். நான் நன்றாக விளையாடி இருந்தால் அந்த அணியில் நிச்சயம் இருந்திருப்பேன். நான் நன்றாக விளையாடவில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்வது முக்கியம். அதே நேரத்தில் சாம்பியன்ஸ் டிராபி அணியை பார்த்தால் அதில் இருக்கும் அனைவரும் தரமான வீரர்கள். சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தக் கூடிய வீரர்களாக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க:இங்கி தொடர்.. இன்னும் ஒரே 1 சதம்.. டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறை படைக்கப் போகும் திலக் வர்மா.. முழு விவரம்
ஒப்பீட்டளவில் ஒருநாள் வடிவத்தில் அவர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் அனைவரும் உள்நாட்டு தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்பதை நினைக்கும்போது சற்று வேதனை அளிக்கிறது. நான் நன்றாக விளையாடி இருந்தால் ஒரு நாள் அணியில் இருந்திருப்பேன். அப்படி இல்லாத போது என்னை விட தகுதியான ஒரு நபர் அங்கு இருக்கிறார்” என சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.