நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் விராட் கோலியின் சாதனையை இரட்டை வேகத்தில் சமன் செய்து இருக்கிறார்.
பல்லிகேலேவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் என 58 ரன்கள் குவித்தார். அவரோடு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் 49 ரன்களும், ஜெய்ஸ்வால் 40 ரன்களும், கில் 34 ரன்களும் குவித்தனர்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி இந்திய அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறி கொடுத்தது. பகுதி நேர பந்துவீச்சாளரான ரியான் பராக் இரண்டு ஓவர்களில் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை இதுவரை விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி 16 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றிருந்தார். ஆனால் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 56 போட்டிகளில் குறைவாக விளையாடி இந்த சாதனையை 69 போட்டிகளிலேயே நிகழ்த்தியிருக்கிறார். 69 போட்டிகளில் விளையாடி 16 முறை ஆட்டநாயகன் விருதினை வென்று விராட் கோலியின் சாதனையை சமன் செய்தது மட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் உலக சாதனையையும் நிகழ்த்தி இருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா 91 போட்டியில் விளையாடி 15 முறை ஆட்டநாயகன் விருதையும், ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி 129 போட்டியில் விளையாடி 14 முறை ஆட்டநாயகன் விருதையும், இந்தியாவின் ரோகித் சர்மா 159 போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்டநாயகன் விருதையும் விருதையும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:2019ல் நியூசியின் கோப்பையை பறித்த தப்பான தீர்ப்பு.. இந்தியா இலங்கை போட்டியில் திருத்தப்பட்டது.. இனி நடக்காது
குறைந்த போட்டிகளில் விளையாடி அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற சாதனையும் சூரியகுமார் யாதவ் படைத்திருக்கிறார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. தொடரை கைப்பற்றும் முயற்சியில் இந்திய அணியும், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணியும் விளையாடும் என்பதால் இந்த போட்டியில் அனல் பறப்பது உறுதி.