“வார்த்தை தவறிய சூரியகுமார் யாதவ்.. இதுதான் சுயநலம் இல்லாமல் விளையாடுவதா?” – ரசிகர்கள் கடுமையான விமர்சனம்!

0
584
Surya

நேற்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டியில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் சதம் அடித்ததின் மூலம், சர்வதேச டி20 போட்டியில் அதிக சதம் அடித்த பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் மேக்ஸ்வெல் இடத்தில் சேர்ந்தார். இவர்கள் மூவரும் தலா நான்கு சதங்கள் அடித்து இருக்கிறார்கள்.

நேற்றைய போட்டியில் கில் மற்றும் திலக் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த காரணத்தினால், இளம் வீரர் ஜெய்ஸ்வாலை அடிக்க விட்டு சூரியகுமார் யாதவ் கொஞ்சம் பொறுமையாக விளையாடினார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் தன்னுடைய முதல் 25 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கைக்குள் வர, அடுத்த 31 பந்துகளில் 77 ரன்கள் குவித்து மிரட்டினார்.

நேற்று 19வது ஓவரின் முடிவின்போது சூரியகுமார் யாதவ் 54 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். இருபதாவது ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து சதத்தை பூர்த்தி செய்து, அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதில் 19வது ஓவரின் கடைசிப் பந்தை ஜிதேஷ் சர்மா அடிக்க, சூரியகுமார் யாதவ் ஒரு ரன் எடுக்க மறுத்து, வேண்டாம் என தடுத்து விட்டார். கடைசி ஓவரை அவரே விளையாட முடிவு செய்தார். தற்பொழுது இதுதான் பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.

என்னவென்றால் சூரியகுமார் யாதவ் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக பேசும் பொழுது “நான் என் வீரர்களை எப்பொழுதும் சுயநலமற்றவர்களாக இருக்க சொல்கிறேன். நான் தனிப்பட்ட ரெக்கார்டுகளை விரும்பும் ஆள் கிடையாது. நான் எப்போதும் அணியையே முதல் இடத்தில் வைக்க சொல்பவன்” என்று கூறியிருந்தார்!

இந்த நிலையில்தான் சூரியகுமார் யாதவ் நேற்று ஜிதேஷ் சர்மா கடைசிப் பந்தில் சிங்கிள் எடுக்க முயற்சி செய்ததை தடுத்து விமர்சனத்திற்குள் வந்திருக்கிறார். ஜிதேஷ் சர்மா கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதற்கு என்றே அணியில் இருக்கிறார். அவர் முழுமையான பேட்ஸ்மேன்.

இப்படி இருக்கும் பொழுது அவருடைய ரன்னை தடுப்பது எந்த விதத்திலும் சரியான ஒன்று கிடையாது. வார்த்தை மறந்து நடந்து கொண்ட சூரியகுமார் என்று தற்பொழுது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்!

- Advertisement -