இன்று ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி 245 ரன்கள் குவிக்க அதை திருப்பி அடித்து சொந்த மைதானத்தில் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது சொந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது.
ஸ்ரேயாஸ் ஐயர் தனிப்பட்ட சாதனை
இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இளம் வீரர் பிரியன் ஆர்யா 13 பந்தில் 36 ரன்கள், பிரப்சிம்ரன் சிங் 23 பந்தில் 42 ரன்கள் எடுத்தார்கள். தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக விளையாடி 22 பந்தில் அரை சதம் அடித்தார். ஐபிஎல் தொடரில் அவருக்கு இது அதிவேக அரை சதமாக அமைந்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதியாக 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தரப்பில் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ருத்ர தாண்டவம் ஆடிய துவக்க ஜோடி
இதைத்தொடர்ந்து ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஹெட் மற்றும் அபிஷேக்சர்மா இணைந்து அதிரடியாக 150 ரன்கள் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். சிறப்பாக விளையாடிய ஹெட் 37 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இன்னொரு முனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 40 பந்தில் சதம் அடித்தார். மேலும் 55 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 141 ரன்கள் எடுத்தார். முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18.3 ஓவரில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : 40 பந்தில் ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக் ஷர்மா.. சதம் அடித்து பேப்பரில் காட்டியது என்ன? – சுவாரசிய தகவல்
ஐபிஎல் வரலாற்றில் தனிநபர் அதிகபட்சமாக கிரீஸ் கெயில் 175 ரன்கள், பிரண்டன் மெக்கலம் 158 ரன்கள் எடுத்து முதல் இரண்டு இடத்தில் இருக்கிறார்கள். மூன்றாவது இடத்தில் இந்த போட்டியில் 141 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா இடம் பிடித்திருக்கிறார். 18 வருட ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர் ஒருவரின் தனிநபர் அதிகபட்சமாக இது பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்பாக கேஎல் ராகுல் 132 ரன்கள் எடுத்தது இருந்தது!






