இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தாலும் ஒரு சில இந்திய வீரர்களின் ஆட்டம் பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக அமைந்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஜெய்ஸ்வால் குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி தனது பேட்டிங் திறமையை வெளிநாட்டில் நிரூபித்தார். அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் விளையாடியது. இதில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் விரைவாக ஆட்டம் இழந்தாலும் அதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்சில் மிக நேர்த்தியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.
அதற்குப் பிறகு சில ஆட்டங்களில் அவரது பேட்டிங் குறிப்பிடத்தக்க வகையில் பாராட்டுக்குரியதாக அமைந்தது. உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடும் பெரும்பாலான இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் சொதப்பி விடுவார்கள். ஆனால் ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா தொடரின் தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் மீது தனக்கு சந்தேகம் இருந்ததாக சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஜெய்ஸ்வாலின் நல்ல குணம் என்னவென்றால், அவர் தனது தவறுகளில் இருந்து மிக விரைவாக திருத்திக் கொள்கிறார். கடந்த தென்னாப்பிரிக்க தொடரின் போது அவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவுட் ஆன விதத்தால் இது போன்ற ஆடுகளங்களில் அவரால் ரன்கள் குவிக்க முடியுமா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆஸ்திரேலியாவில் முதல் இன்னிங்ஸில் அவர் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆனால் அதற்குப் பிறகு மிட் ஆஃப், மிட் ஆன் என நேராக மிக நேர்த்தியாக விளையாடியதைப் பார்க்கும்போது அற்புதமானதாக இருந்தது.
இதையும் படிங்க:இந்திய அணியில் அவர் இல்லை.. அதனால ஒரு கேப்டனா ரோஹித் சிக்கிட்டாரு – ஆஸி முன்னாள் வீரர் பேட்டி
குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலந்து பந்தை ஸ்விங் செய்யும் போது அவர் கிரீசுக்கு வெளியே நின்று சிறப்பாக விளையாடினார். மேலும் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோரை சமாளித்து ஒவ்வொரு போட்டியிலும் எப்படி முன்னேறி வந்தார் என்பதை பார்க்கும்போது சிறப்பாக இருக்கிறது. ஆரம்பத்தில் சில சமயங்களில் அவர் ஆக்ரோஷமாக இருப்பதாக நான் உணர்கிறேன்.இது டெஸ்ட் போட்டி ஐந்து நாட்கள் விளையாட முழுமையாக உள்ளது. எனவே ஆடுகளம் எப்படி இருந்தாலும் சிறிது நேரம் அமைதி காத்து அதற்கு பிறகு விளையாடுங்கள். எளிதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






