நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணம் ரோஹித் சர்மாவா இல்லை ஜஸ்பிரித் பும்ராவா? என கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய லெஜன்ட் சுனில் கவாஸ்கர் வெளிப்படையான பதிலைக் கூறியிருக்கிறார்.
2024 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு அதிக ரன்கள் அடித்தவராக பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா இருக்கிறார். அதே சமயத்தில் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றியவராக பந்துவீச்சில் அர்ஸ்தீப் சிங் 17 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். ஒரு டி20 உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் இவர்தான்.
அதேசமயத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எட்டு போட்டிகளில் 15 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஓவருக்கு நான்கு ரன்கள் மட்டும் என்கின்ற அளவில் அவரது எக்கனாமி மிகச் சிறப்பாக இருக்கிறது. மேலும் அவரே தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
மேலும் ஆல்ரவுண்டர் செயல்பாட்டில் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் அக்சர் படேல் மற்றும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹரிதிக் பாண்டியா இருவரும் இந்திய அணியின் வெற்றியில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இப்படியான நிலையில் இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றிக்கு யார் காரணம்? என சுனில் கவாஸ்கர் தீர்ப்பளித்திருக்கிறார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ஜஸ்பிரித் பும்ரா தொடர் நாயகன் விருது பெறுவதற்கு முற்றிலும் தகுதியானவர். ஆனால் இந்திய அணியின் மிகச் சிறப்பான செயல்பாட்டுக்கு உந்து சக்தியாக இருந்தது ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிதான். அவர் கேப்டனாக முன்மாதிரியாக இருந்தார். அவருடைய உடல் மொழியில் எந்த இடத்திலும் பதட்டத்தைப் பார்க்க முடியவில்லை. அவர் மிகவும் அமைதியாக காணப்பட்டார். இது இந்திய அணி எல்லா துறைகளிலும் வெற்றி அடைவதற்கு அடிப்படையாக இருந்தது.
இதையும் படிங்க : டி20 உலக கோப்பைக்கு முன்பே என் பையன் இத சொன்னான்.. அதான் உடம்பு சரியில்லாமையும் வந்தேன் – ரோகித் சர்மா அம்மா பேட்டி
ரோகித் சர்மாவின் அனிமேஷன் செயல்பாடுகளுக்கு நாம் பழக்கப்பட்டு விட்டாலும் கூட, இந்திய அணிக்கு சவாலான தருணங்களில் அவரது தலைமைத்துவம் மிக உயர்ந்த பாராட்டுக்கு உரியது. எனது கருத்துப்படி ரோகித் சர்மாவின் கேப்டன்ஷி உலகக் கோப்பை தொடரின் தனித்துவமான செயல்பாடாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






