இந்திய கிரிக்கெட் அணி நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் விளையாட உள்ளது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணி குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி நாளை நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும். ஒருவேளை நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்தால் இந்திய அணி தென்ஆப்பிரிக்க அணியோடு தனது போட்டியை விளையாட இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடக்கூடாது என்பதிலேயே பெரும்பாலானோர் கவனம் இருக்கிறது. ஏனென்றால் கடந்த ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி இருப்பதால் அதுபோன்ற இன்னொரு சம்பவம் நிகழ்ந்துவிடக் கூடாது என்று இந்திய ரசிகர்கள் கூறிவரும் நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடினால் சிறப்பானதாக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து கவாஸ்கர் விரிவாக கூறும்போது “இரண்டு அணிகளும் வலிமையாக இருப்பதால் எந்த தவறும் செய்ய வேண்டியதில்லை. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளுமே வலுவாக இருப்பதால் இந்திய அணி விரும்பக்கூடிய அணியாக எதுவும் இருக்காது. இப்போது அவர்கள் நாக் அவுட் சுற்றுக்கு வந்து விட்டார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். இதில் ஒன்று வெற்றி இல்லை எனில் தோல்வி. அதனால் அவர்கள் வேறு எதையும் விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி இருப்பதால் கடந்த டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடியதை விட ஆஸ்திரேலியா அணியை இந்திய அணிக்கு நன்றாக தெரியும்.
இதையும் படிங்க:இந்தியா நியூசிலாந்து போட்டி.. விராட் கோலி படைக்கப் போகும் உலக சாதனை.. கிரிக்கெட் உலகின் முதல் வீரர்.. முழு விபரம்
ஆஸ்திரேலியா அணியில் ஒருவேளை முக்கியமான பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருப்பதால் அவர்களை இந்திய அணி விரும்பலாம். ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் என யாரும் இல்லை. எனவே இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விளையாட விரும்பலாம்” என்று பேசியிருக்கிறார். இந்திய அணி நாளை வெற்றி பெற்றால் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.






