டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் 76 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது.
இனி அரையிறுதிக்கு தகுதி பெற மீதமுள்ள இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்று இருக்கும் நிலையில் இது குறித்து சுனில் கவாஸ்கர் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த இந்திய அணியில் முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் ரன் ஏதுமின்றி அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு அழுத்தத்திற்கு சென்ற இந்திய அணி நிலைத்து நின்று யாராலும் விளையாட முடியவில்லை.
மேலும் தென்னாபிரிக்க பவுலர்களின் கட்டுக்கோப்பான மற்றும் சரியான திட்டத்தின் தாக்குதலால் இந்திய அணி 111 ரன் மட்டுமே எடுத்து 76 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக தொடக்க வீரர்களின் சொதப்பலை சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “முதல் ஆறு ஓவர்களில் நீங்கள் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து விளையாடினால் எந்த ஒரு இலக்கையும் துரத்த உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இதுவரையிலும் இந்திய அணியிடமிருந்து நல்ல ஒரு தொடக்கம் கிடைத்ததில்லை. உண்மையில் அவர்கள் தங்கள் முதல் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து விடுகிறார்கள்.
அந்த சூழ்நிலை அவர்களை உண்மையிலேயே பின்னுக்குத் தள்ளுகிறது. மேலும் மூன்றாவதாக களமிறங்கும் பேட்ஸ்மேன் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. இருப்பினும் இந்தப் போட்டியை தவிர்த்துப் பார்த்தால் இந்திய அணி அடுத்து வரும் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறும் என்று நான் நம்புகிறேன். ஆனால் இந்திய அணி சூழ்நிலையை உணர்ந்து நன்றாக விளையாடி வெற்றி பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும்” என்று பேசி இருக்கிறார்.