தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் முக்கிய வீரராக திகழ்ந்த ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு தொடர் முழுவதும் பெரிய சிக்கலை ஏற்படுத்தினார்.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பும்ரா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே இந்திய அணி வேகப்பந்துவீச்சு யூனிட்டில் பும்ராவை அதிகமாக சார்ந்து இருந்தது. ஏனென்றால் சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேற முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ஹர்ஷித் ரானா போன்ற வீரர்கள் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடினார்கள். இருப்பினும் அவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் வழக்கம்போல பும்ராவின் மீது அதிகமான சுமை ஏற்றப்பட்டது.
இருப்பினும் பும்ராவும் அதை திறம்பட சமாளித்து விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் ஐந்தாவது போட்டியில் எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஐந்தாவது போட்டியில் மிகப்பெரிய அழுத்தத்தில் இருந்திருக்க வேண்டிய ஆஸ்திரேலியா அணி எளிதாக வென்று தொடரை கைப்பற்றியது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி பும்ராவை பாதுகாக்க வேண்டும் எனவும் இளம் வீரர்களுக்கு சர்வதேசத் தொடரில் வாய்ப்புகளை வழங்கி உருவாக்க வேண்டும் எனவும் சில முக்கிய கருத்துக்களை சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தியாவில் வாய்ப்புக்காக காத்திருக்கும் நம்பிக்கைக்கு உரிய வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். பும்ரா மீது அதிக சுமை இருக்கக் கூடாது. எனவே திறமையான வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்கினால் எந்த சூழ்நிலையிலும் போட்டிகளை வெல்லக்கூடிய வாய்ப்பை நாம் பெறலாம். அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்காவிட்டால் ரஞ்சிப் போட்டியில் சிறப்பாக விளையாடுபவர்கள் சர்வதேச தொடரில் சிறப்பாக விளையாடுவார்களா? என்பதை நாம் எப்படி அறிய முடியும்.
இதையும் படிங்க:கேஎல் ராகுலை வைத்து.. அவருக்கு இப்படி செஞ்சது சரியல்ல.. அவர் ரெக்கார்டு என்னனு பாருங்க – சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி
இங்கே நல்ல சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டியின் திறமையை அறிந்து இந்திய அணி அவருக்கு வாய்ப்பு வழங்கியதற்காக அஜித் அகர்கர் மற்றும் அவரது குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே பும்ரா மீது அதிக சுமை ஏற்றாமல் அவருக்கு மாற்றாக தரமான பவுலர்களை உருவாக்குவதில் இந்திய அணி கவனம் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.