அயர்லாந்து தொடரில் இவருக்கு வாய்ப்பு தராதது பெரிய இழப்பு – சுனில் கவாஸ்கர் கவலை

0
196
Sunil Gavaskar

இந்த ஐ.பி.எல் தொடரில் இரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலபேரை ஆச்சரியப்படுத்திய ஒரு அணி குஜராத் டைட்டன்ஸ் அணி. பலரது கணிப்புகளையும் தவிடு பொடியாக்கியதோடு, புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து ப்ளே ஆப்ஸ் சுற்றில் நுழைந்ததோடு, இறுதி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டமும் வென்று அசத்தியது.

குஜராத் அணியை ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல், பந்துவீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் ஹர்திக் பாண்ட்யா முன்னே நின்று எடுத்துச் சென்றார் என்றால், பேட்டிங்கில் துவக்க இடத்தில் சுப்மன் கில், விருதிமான் சஹா, நடுவரிசையில் டேவிட் மில்லர், பினிசிங்கில் ராகுல் திவாட்டியா, ரஷீத் கான், பவுலிங்கில் மொகம்மத் ஷமி, லாக்கி பெர்குசன், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயால், ரஷீத் கான், சாய் கிஷோர் என ஒவ்வொருவரும் தனி முத்திரை ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்கள்.

- Advertisement -

குஜராத் அணிக்கான இந்த முத்திரை ஆட்ட பட்டியலில் ஹரியானாவைச் சேர்ந்த 29 வயதான, லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் ராகுல் திவாட்டியா மிக முக்கியமானவர். பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தில் கடைசி இரு பந்துகளில் இரு சிக்ஸர்கள் தேவைப்பட்ட பொழுது, அதை அனாசயமாக அடித்து, குஜராத் அணியை வெற்றிப்பெற வைத்ததோடு அணியின் நம்பிக்கையையும் அதிகரித்தார். ஹைதராபாத் அணியுடனான ஆட்டத்திலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருந்தார். இந்தத் தொடரில் பேட்டிங்கில் பினிசிங் ரோலில் 16 ஆட்டத்தில் 217 ரன்கள் அடித்திருந்தார்.

இவர் முதன் முதலாக 2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகப் பத்து இலட்சத்திற்குப் வாங்கப்பட்டு, அடுத்த ஒரு ஆண்டு விளையாடி, அடுத்து ஆண்டு விளையாட முடியாமல் போனார். இதற்கடுத்து 2017ஆம் ஆண்டு பஞ்சாப் அணி இவரை 25 இலட்சத்திற்கு வாங்க, அடுத்த 2018 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் மூன்று கோடிக்கு டெல்லி அணி வாங்கியது. ஆனால் டெல்லி அணியிடம் இருந்து 2020ஆம் ஆண்டு மூன்று கோடிக்கு இவரை திரும்ப ராஜஸ்தான் அணியே வாங்கியது. தற்போது இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் சென்னை அணியோடு இறுதிவரை மோதி ஒன்பது கோடிக்குக் குஜராத்அணி வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது!

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராகுல் திவாட்டியாவின் ஆட்டம் மிகச்சிறப்பாக பேட்டிங்கில் பினிசிங்கில் இருக்க, அவருக்குத் தற்போது நடந்து வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்துத் தற்போது அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலும் ராகுல் திவாட்டியா பெயர் இடம் பெறவில்லை. இதனால் விரக்தி அடைந்த ராகுல் திவாட்டியா ட்வீட்டரில் தன் விரக்தியைச் சற்று வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ராகுல் திவாட்டியாவுக்கான வாய்ப்பு குறித்துப் பேசியுள்ள மாஸ்டர் சுனில் கவாஸ்கர் “அயர்லாந்து தொடரில் ராகுல் திவாட்டியா இல்லாதது பெரிய இழப்பாகும். அவர் கடந்த ஐ.பி.எல் தொடரில் மிகச்சிறப்பான புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்” என்று தெரிவித்து உள்ளார்!