காயம் ஏற்பட்டு விட்டது என மருத்துவ சான்றிதழ் பெறுவது குழந்தைத்தனமான விஷயம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு அனைத்து வீரர்களும் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது.
இதனை அடுத்து ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், கில் போன்ற ஸ்டார் வீரர்கள் ரஞ்சிப் போட்டிக்கு திரும்பினர். ஆனால் விராட் கோலியும்,ராகுலும் தங்களுக்கு கழுத்து, முதுகு வலி ஏற்பட்டதாக கூறி ரஞ்சிப் போட்டியில் பங்கேற்காமல் இருந்தனர். இந்த நிலையில் விராட் கோலி வரும் 30ஆம் தேதி தொடங்கும் ரஞ்சிப் போட்டியில் பங்கேற்க முடிவெடுத்திருக்கிறார்.
குழந்தைத் தனமான விசயம்:
இந்த நிலையில் விராட் கோலியும், கே எல் ராகுலும் ரஞ்சிப் போட்டியை தவற விட்டதற்கு கவாஸ்கர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இது குறித்து பேசிய அவர், “தமக்கு காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் இடமிருந்து சான்றிதழ் வாங்குவது குழந்தைத்தனமான விஷயம். உண்மையில் அவர்கள் காயமடைந்தால் உடனடியாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சி பெற்றிருக்க வேண்டும்”.
“அங்கு இருந்த மருத்துவக் குழுவினரை நாடி மீண்டும் உடல் தகுதியை எட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருக்க வேண்டும். நிதிஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டவுடன் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட்டது போல் கோலியும் கே எல் ராகுலும் சென்று இருக்க வேண்டும். பிசிசிஐயால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களில் நடைமுறை இதுதான்”.
உங்களுக்கு மட்டும் தனி விதியா? :
“தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள மருத்துவர்கள் வீரர்களை பரிசோதனை செய்து வீரர் உடல் தகுதியுடன் இருக்கிறாரா இல்லையா என்று சான்றிதழ் அளிப்பார்கள். ஆனால் சில வீரர்கள் தங்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறி ரஞ்சி போட்டியில் பங்கேற்காமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் என் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லவில்லை”.
“இது குறித்து பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோகித் சர்மா ரஞ்சிப் போட்டிக்கு திரும்பியது நல்ல விஷயமாக இருந்தாலும், அவர் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று விளையாடினாரா என்ற கேள்வி எழுகிறது. காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை தோல்வியை தழுவி இருப்பது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது” என கவாஸ்கர் கூறியுள்ளார்.