நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்த தோல்விக்கு முக்கிய காரணங்கள் குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் பெரிய தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. எனவே இந்த முறையும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது என்பது பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அணி நிர்வாகத்திற்குள் இடையே நிலவும் குழப்பம் மற்றும் நிலைத்தன்மையற்ற கேப்டன்ஷிப் போன்ற காரணங்கள் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய விஷயங்களாக பார்க்கப்படுகிறது.
மேலும் முந்தைய ஐபிஎல் தொடர்களை பொறுத்தவரையில் மற்ற அணிகளில் சிறப்பாக செயல்படாத வீரர்கள் சிஎஸ்கேவிற்கு வந்ததும் சிறப்பாக செயல்பட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திச் செல்வார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறி, சிஎஸ்கேவில் இருந்து வெளியேறி மற்ற அணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்று சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “முன்பெல்லாம் வீரர்கள் பிற அணிகளில் தடுமாறி விட்டு சிஎஸ்கேவில் வந்ததும் சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால் இப்போது வீரர்கள் சிஎஸ்கேவில் இருந்து வெளியேறி வேறு அணிகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள். அணியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் பேச்சும் செயலும் முற்றிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளன. அவர்களின் நகர்வுகளுக்கும் மாற்றங்களுக்கும் பின்னால் எந்த மாதிரியான நியாயமான காரணமும் இருப்பதாக தெரியவில்லை. நிர்வாகத்திடம் கேள்வி எழுப்ப வேண்டும்.
மெகா ஆக்ஷனில் தாங்கள் தோல்வி அடைந்து விட்டதாக சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜே கூறியிருந்தார். ஏலத்திற்கு முன்பாக ஜடேஜாவை தக்க வைத்துக் கொண்டனர். டெல்லி அணி 13.75 கோடி ரூபாய்க்கு கேஎல் ராகுலை வாங்கி இருந்தபோது சிஎஸ்கேவாலும் அவரை வாங்கி இருக்க முடியும். அந்த சமயத்திலேயே கேஎல் ராகுலை வாங்கி இருந்தால் தற்போது ஜடஜாவை கொடுத்து சாம்சனை வாங்கியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது” என்று பேசி இருக்கிறார்.






