“நியூசிலாந்து தொடர் தான் கடைசி, இனிமே மூத்த வீரர்களுக்கு அதெல்லாம் கொடுக்கக்கூடாது” – கவாஸ்கர் கருத்து!

0
390

இந்திய அணியில் இனிமேல் மூத்த வீரர்களுக்கு இப்படிப்பட்ட சலுகைகளை கொடுக்கவே கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

டி20 உலககோப்பை தொடர் முடிந்தவுடன் ஒரு சில நாட்களிலேயே நியூசிலாந்து அணி உடனான தொடர் நடைபெற்றது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிகபட்சமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. மேலும் ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது. ஜடேஜா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா இருவரும் காயம் காரணமாக இடம்பெறாமல் இருந்தனர்.

காயத்தில் இருப்பவர்களை தவிர்த்து விட்டு மற்ற சீனியர் வீரர்களுக்கு இந்திய அணியில் இனி ஓய்வு என்பது இருக்கக் கூடாது. போட்டிகளுக்கு நடுவே கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயன்படுத்தி கொள்ளட்டும். ஒரு தொடருக்கும் மற்றொரு தொடருக்கும் இடையே கிடைக்கும் ஓரிரு வாரங்களை ஓய்விற்காக பயன்படுத்திக் கொள்ளட்டும். தொடர் முழுவதும் ஓய்வு என்பது கொடுக்கக் கூடாது என்று கடுமையாக சாடி இருக்கிறார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். அவர் தெரிவித்ததாவது:

“இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு எதற்காக ஓய்வு என்பது கொடுக்கப்பட வேண்டும். 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு இன்னும் ஓராண்டு கூட முழுமையாக இல்லை. அதற்குள் இப்படி ஓய்வு என்பதை எடுத்துக் கொண்டால், எப்படி செய்த தவறுகளை சரி செய்ய முடியும்? எவ்வளவு போட்டிகள் ஒன்றாக விளையாடுகிறார்களோ அவ்வளவு அனுபவமும் புரிந்துணர்வும் வீரர்களுக்கு மத்தியில் ஏற்படும். ஒரே மாதிரியான அணியை தொடர்ச்சியாக விளையாட வைக்கும் போது தான் என்ன தவறு நேர்ந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு தொடருக்கும் புதிய புதிய வீரர்கள் அந்தந்த இடத்திற்கு வரும் பொழுது, எப்படி சீனியர் வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பும் பொழுது அவர்களுக்குள் நல்ல புரிதல்கள் இருக்கும்? ஒருநாள் போட்டிகளில் முழுக்க முழுக்க பார்ட்னர்ஷிப் பொறுத்து வெற்றி தோல்வி மாறுபடும். ஆகையால் புரிதல் இல்லை என்றால் எப்படி பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியும்? எப்படி அணி வெற்றி பெறும்?.

இவற்றை மனதில் கொண்டு 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யுங்கள். சீனியர் வீரர்களுக்கு சலுகைகளை இனியும் கொடுக்க வேண்டாம். இத்தனை வருடம் ஐசிசி கோப்பைகளை வெல்லாமல் இருப்பது இந்தியா போன்ற அணிக்கு பெருத்த அவமானமாக கருத வேண்டும். 2023 மிக முக்கியமானது நமக்கு.” என்றார்.