சிஎஸ்கே அணியுடனான நீண்ட பயணத்தை முடித்த ஸ்டீபன் பிளெமிங்கின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவரை தேடி மிகப்பெரிய வாய்ப்பு வந்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிளெமிங் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை இந்தப் பதவிக்கான முக்கிய பெயர்களில் அவர் முன்னிலையில் இல்லாத நிலையில், தற்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த இரண்டு வாரங்களாக நடத்திய நேர்காணல்களில் பிளெமிங் நிர்வாகிகளை வெகுவாக கவர்ந்ததாக கூறப்படுகிறது. பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு ஏற்பட்ட காலியிடத்தை நிரப்பவே இந்தத் தேர்வு நடைபெறுகிறது. மெக்கல்லம் தொடர்ந்து இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை கவனிக்க உள்ளதால், நியூசிலாந்தின் முன்னாள் சக வீரர்களான இருவரும் இங்கிலாந்து அணிக்காக மீண்டும் ஒன்றாக பணியாற்றும் சூழல் உருவாகியுள்ளது.
2009-ல் வேண்டாம் என்ற பதவி.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாய்ப்பு
பிளெமிங்கிற்கு இங்கிலாந்து அணியிலிருந்து வாய்ப்பு வருவது இது முதல்முறையல்ல. வீரராக ஓய்வு பெற்ற பிறகு 2009-லேயே அவரை பயிற்சியாளர் பொறுப்புக்கு இங்கிலாந்து அணுகியதாக கூறப்படுகிறது; ஆனால் அப்போது பயிற்சியாளர் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்ததால் அந்த வாய்ப்பை அவர் ஏற்கவில்லை. இப்போது 53 வயதில், ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான பயிற்சியாளர்களில் ஒருவராக தன்னை நிரூபித்த பிறகு அதே இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பொறுப்பு மீண்டும் அவரை தேடி வந்துள்ளது.
2008-ல் சிஎஸ்கே வீரராக இணைந்த பிளெமிங், அடுத்த ஆண்டே அணியின் தலைமை பயிற்சியாளராக மாறினார். அவரது தலைமையில் சென்னை அணி ஐந்து ஐபிஎல் கோப்பைகளையும் இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் வென்றது. சமீபத்திய ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே 8-வது இடத்தில் முடித்ததை தொடர்ந்து, சென்னை மட்டுமின்றி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளின் பயிற்சியாளர் பொறுப்புகளிலிருந்தும் அவர் விலகினார்.
பிளெமிங் உடனடியாக பொறுப்பேற்பாரா என்பது மட்டும் இன்னும் தெளிவாகவில்லை. ஆகஸ்ட் 19 முதல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு மார்கஸ் டிரெஸ்கோதிக் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட வாய்ப்புள்ளது; டிசம்பரில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது பிளெமிங் முழுமையாக பொறுப்பேற்கலாம் என கூறப்படுகிறது. சிஎஸ்கேவுடன் 18 ஆண்டுகள் நீடித்த அத்தியாயம் முடிந்த சில வாரங்களிலேயே, சர்வதேச கிரிக்கெட்டின் முக்கியமான டெஸ்ட் அணிகளில் ஒன்றை வழிநடத்தும் வாய்ப்பு பிளெமிங்கின் கதவைத் தட்டியுள்ளது.






