இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2-0 எனத் தொடரையும் கைப்பற்றியது. இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா வெற்றிக்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார்.
இன்றைய போட்டியிலும் தொடர்ந்து மூன்றாவது போட்டியாக டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா முதலில் இலங்கையணி பேட்டிங் செய்யும் என முடிவு செய்தார். ஆரம்பத்தில் ஆடுகளம் முதல் 20 ஓவர்களுக்கு பேட்டிங் செய்வதற்கு சாதகமான நிலையில் இருந்தது.
இதை பயன்படுத்தி விளையாடிய இலங்கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன்கள் குவித்தார்கள். இலங்கை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷாங்கா 65 பந்தில் 45 ரன்கள், அபிஷ்கா பெர்னாடோ 102 பந்தில் 96 ரன்கள், குசால் மெண்டிஸ் 82 பந்தில் 52 ரன் எடுத்தார்கள். இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் அறிமுகவீரர் ரியான் பராக் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் ஆட்டம் இந்த முறையும் மிக மோசமாக அமைந்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 35 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் போராடி 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 26.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரண்களில் சுருண்டது. இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 27 வருடத்திற்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணியிடம் கைப்பற்றியது.
இந்த சிறப்பு வாய்ந்த வெற்றிக்கு பிறகு பேசிய இலங்கை கேப்டன் சரித் அசலங்கா “நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியான ஒரு கேப்டனாக இருக்கிறேன். எங்களுடைய அணி இந்த தொடர் முழுவதையும் மிகச் சரியாக எல்லாவற்றையும் செய்தது. அவர்கள் மிக வலுவான பேட்டிங் வரிசை என எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
இதையும் படிங்க : இது இந்தியா கிடையாது.. ரோகித் டீம் எங்ககிட்ட வசமா சிக்கினது இப்படிதான் – தீக்சனா பேட்டி
இந்த காரணத்தினால் நாங்கள் எங்களுடைய பந்துவீச்சை ஆதரிக்க விரும்பினோம். எங்களுடைய சுழல் பந்துவீச்சு எங்களுடைய பலம். நாங்கள் அதை நம்பி ஆதரித்தோம். இப்போது எங்கள் அணியின் வீரர்கள் மிகவும் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள். எங்கள் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். எங்களுடைய வீரர்கள் அணியின் சூழ்நிலையை மிகவும் ரசித்து இருந்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.






