தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு ஐந்து விக்கெட்டுகள் கைவசம் இருக்க 143 ரன்கள் ஐந்தாவது நாளில் தேவைப்படுகிறது.
இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்கா சென்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரண்டாவது போட்டியை இலங்கை வெல்லும் பட்சத்தில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு கொஞ்சம் சாதகமான சூழ்நிலை உருவாகும்.
இரண்டு அணிகளின் முதல் இன்னிங்ஸ்
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ரியான் ரிக்கல்ட்டன் 101, வெர்ன்னினே 105 என இருவர் சதம் அடித்தார்கள். அந்த அணி 358 ரன்கள் குவித்தது. லகிரு குமாரா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இலங்கை அணி 328 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் பதும் நிசாங்கா 89, கமீந்து மெண்டிஸ் 48 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் டேன் பேட்டர்சன் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
பரபரப்பான நிலையில் இரண்டாவது டெஸ்ட்
இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு டெம்பா பவுமா 66, மார்க்ரம் 55 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : 7 போர் 8 சிக்ஸ் 113 ரன்.. வங்கதேசத்தை வீழ்த்திய ரூதர் போர்டு.. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
இதற்கு அடுத்து இலங்கை அணிக்கு 348 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி நான்காவது நாள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்று ஐந்தாவது நாளில் அந்த அணி மேற்கொண்டு ஐந்து விக்கெட்டுகள் கைவசம் இருக்க 143 ரன்கள் எடுத்தால் போட்டியை வெல்லும் என்ற பரபரப்பான சூழல் நிலவுகிறது. இலங்கை அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி கொடுத்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற நல்ல வாய்ப்பு அமையும்!






