கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

நெதர்லாந்தை வென்றது இலங்கை ; இந்தியக் குழுவுக்குள் வருகிறதா?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் இன்று மிக முக்கியமான நாள். இன்று இரு போட்டிகள் நாக்-அவுட் முறையில் ஏறக்குறைய நடக்கிறது.

- Advertisement -

ஒரு போட்டியில் இலங்கை அணியும் மற்றொரு போட்டியில் நமீபியா யுஏஇ அணியும் மோதுகின்றன. இந்த இரு போட்டியிலும் வெல்லும் அணிகள் டி20 உலகக் கோப்பை பிரதான சுற்றுக்கு தகுதி பெறும். இந்தப் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி இந்தியா இடம்பெற்றிருக்கும் பி பிரிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. ஆரம்பத்தில் மிக பொறுமையாக சென்ற இலங்கை அணியின் பேட்டிங் பத்து ஓவர்களுக்கு பிறகு வேகமெடுக்க ஆரம்பித்தது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் நிசாங்கா மற்றும் தனஞ்சய டி சில்வா சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தார்கள். ஆனால் இன்னொரு முனையில் நிலைத்து நின்ற துவக்க ஆட்டக்காரர் குஷால் மெண்டிஸ் 44 பந்துகளில் 79 ரன்களை 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சருடன் அடித்தார். இவருக்கு பக்கபலமாக அசலங்கா 31 ரன்கள், ராஜபக்சே 19 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் பிறகு இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தன.

- Advertisement -

இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் மேக்ஸ் தவிர யாரும் பெரிய ஒத்துழைப்பை தரவில்லை. இறுதிவரை களத்தில் நின்று இலங்கை அணியைப் பயமுறுத்திய அவர் 53 பந்துகளில் 71 ரன்களை 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் எடுத்தார். இறுதியில் நெதர்லாந்து அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.

ஆனால் பிரதான சுற்றில் எந்தக் குழுவில் இலங்கை அணி இடம் பெறும் என்பது, அடுத்து நமீபியா யுஏஇ அணிகள் மோதும் போட்டியின் முடிவில் தான் தெரியவரும். அந்தப் போட்டியில் நமீபிய அணி வெற்றி பெற்றால் இந்தியாவின் குழுவுக்குள் இலங்கை அணி வரும். அதே சமயத்தில் அந்தப் போட்டியில் யுஏஇ வென்று நமீபியா தோற்றால், நமீபியா உலகக்கோப்பையை விட்டு வெளியேறும். இலங்கை ஆஸ்திரேலியா நியூசிலாந்து குழுவில் நுழையும். நெதர்லாந்து அணி இந்தியா குழுவில் நுழையும். நமீபியா யுஏஇ அணிகள் மோதும் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்க இருக்கிறது.

Published by