ஆப்கானிஸ்தான அணி இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித் கான் அறுவை சிகிச்சை செய்து கொண்ட காரணத்தினால் விளையாடவில்லை.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்திருந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசாங்கா 18, அவிஷ்கா பெர்னாடோ 5 சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து குசால் மெண்டிஸ் 61, சதிர சமரவிக்கிரமா 52 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தார்கள்.
இதை பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய சரித் அசலங்கா ஆட்டம் இழக்காமல் 74 பந்தில் 97 ரன்கள் எடுத்தார். ஜனித் லியாங்கே 50 ரன்கள் எடுக்க, இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸமத்துல்லா ஓமர்சாய் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் எட்டு ரன்களில் வெளியேறினார்.
இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த துவக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரன் மற்றும் ரஹமத்ஷா இருவரும் சிறப்பாக விளையாடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தொடர்ந்து விளையாடினார்கள்.
ஆப்கானிஸ்தான அணி ஒரு கட்டத்தில் 128 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்தது. அந்த இடத்தில் இரண்டாவது விக்கெட்டாக இப்ராகிம் ஜட்ரன் 76 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மூன்றாவது விக்கெட்டாக ரஹ்மத் ஷா 63 ரன்களில் வெளியேறினார்.
128 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றியை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான அணி, அங்கிருந்து மேற்கொண்டு 28 ரன்கள் மட்டுமே சேர்த்து 9 விக்கெட்டை இழந்து, 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த பெரிய சரிவை ஆப்கானிஸ்தான் அணியினாலே நம்ப முடியவில்லை.
முடிவில் இலங்கை அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. இலங்கை அணியின் வனிந்து ஹ்சரங்கா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.