சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி அடுத்த போட்டியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்க அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வீரர் வான்டர் டசன் இந்திய அணி மீது எழும் விமர்சனங்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலை
இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தற்போது துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகிறது. வங்கதேச அணிக்கு எதிராக முதல் போட்டியை இதே மைதானத்தில் விளையாடிய இந்திய அணி, அதற்கு அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது போட்டியையும் இதே மைதானத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது போட்டி மற்றும் அரை இறுதிப் போட்டி என தொடர்ச்சியாக ஒரே மைதானத்தில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஒரே மைதானம், ஒரே ஹோட்டல், ஒரே வசதி என இந்திய அணிக்கு சாதகமாக பல விஷயங்கள் இருக்கிறது எனவும், ஆனால் இதுபோல மற்ற அணிகளுக்கு எதுவும் கிடையாது என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இது சாம்பியன்ஸ் டிராபி தொடரை நேர்மையற்ற முறையில் ஆக்குகிறது எனவும் சில கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வந்த நிலையில் இது குறித்து தென் ஆப்பிரிக்க வீரர் வான்டர் டசன் பேசியிருக்கிறார்.
அழுத்தம் நிச்சயம் இருக்கும்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒரே இடத்தில் தங்கவும், ஒரே ஹோட்டலில் தங்கவும், அதே வசதிகளில் பயிற்சி செய்யவும், ஒரே மைதானத்தில் ஒவ்வொரு முறையும் விளையாட முடிந்தால் அது அனைத்தும் நன்மையே ஆகும். நிச்சயமாக இது ஒரு நன்மை அளிக்கக் கூடிய விஷயம்தான் பாகிஸ்தான் அணி இது குறித்த கருத்து தெரிவித்திருப்பதை பார்த்தேன். ஒரே இடத்தில் அதே வசதிகளில் விளையாடுவது இந்திய அணிக்கு நிச்சயமாக நன்மை அளிக்கும்.
இதையும் படிங்க:இது ஒரு வெட்கக்கேடான விஷயம்.. பும்ரா ஐசிசி தொடருக்கு உடல் தகுதி பெறாதது குறித்து பாக் முன்னாள் வீரர் பேட்டி
இதைத் தெரிந்து கொள்ள நீங்கள் ஒரு ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அந்த நன்மையை பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அவர்கள் மீது இருக்கும். ஒருவகையில் அது அவர்களுக்கு அதிக அழுத்தத்தை தருகிறது. ஏனென்றால் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாட செல்பவர்களுக்கு அங்கு இருக்கும் சூழ்நிலை புதியதாக இருக்கும். ஆனால் இந்திய அணி இங்கே ஏற்கனவே விளையாடி பழக்கப்பட்டு இருப்பதால் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதில் அழுத்தம் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






