பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அதிரடியாக விளையாடி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்தது. இதைத்தொடர்ந்து டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டி இருப்பதால் பல முன்னணி வீரர்கள் விளையாடவில்லை.
அதிரடி காட்டிய தென் ஆப்பிரிக்கா
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ரீசா ஹென்றிக்ஸ் 40 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 60 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் 13 பந்துகளில் 23 ரன்கள், அடுத்து வந்த டோனி டி சோர்சி 16 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்கள்.
தென் ஆபிரிக்கா அணி எட்டு ஓவர்களில் 100 ரன்கள் தாண்டியது. ஆனால் அதற்குப் பிறகு வந்தவர்கள் சரியாக விளையாடவில்லை. ஜார்ஜ் லிண்டே மட்டும் சுதாரித்து விளையாடி 22 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. முகமத் நவாஸ் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
பாபர் அசாம் பரிதாபம்
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபர்கான் 19 பந்தில் 24 ரன், சையும் ஆயுப் 28 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார்கள். இதற்கு அடுத்து கடைசி கட்டத்தில் வந்த முகமது நவாஸ் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 20 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: 2 வார்த்தைக்கு மேல பேச மாட்டாரு.. ஆனா இப்போ அவர்கிட்ட அமைதியா இருங்கன்னு கெஞ்சுறேன்.. கேஎல் ராகுல் நகைச்சுவை
இந்த டி20 தொடருக்கு பாகிஸ்தான் டி20 அணியில் மீண்டும் பாபர் அசாமுக்கு இடம் கொடுக்கப்பட்டது. திரும்பி உள்ளே வந்த அவர் இரண்டு பந்துகளை மட்டும் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி ரசிகர்களை வெறுப்பேற்றினார். பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்னில் சுருண்டது. தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் கார்பின் போஸ் 4 விக்கெட் கைப்பற்றினார்.






