தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அயர்லாந்து அணி நிர்ணயித்த 284 ரன்கள் இலக்கை தென்னாப்பிரிக்கா அணி தற்போது விளையாடி வருகிறது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக அயர்லாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளரான டுமினி களத்திற்குள் வந்து பீல்டிங் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் அதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கு
அயர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்கள் துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இதில் ஏற்கனவே நடைபெற்ற டி20 தொடர் இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி சரிசமமாக டிராவில் முடிவடைந்தது. இதில் அதற்குப் பிறகு நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவது நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டெர்லிங் 92 பந்துகளில் எட்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 88 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு டெக்டார் 60 ரன்கள் குவிக்க அயர்லாந்து அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு சவாலான ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பீல்டிங் செய்த பயிற்சியாளர்
இந்த நிலையில் அயர்லாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது தென் ஆப்பிரிக்கா அணியில் ஒரு குறிப்பிட்ட அம்சமாக தென்னாபிரிக்காவின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஜேபி டுமினி மாற்று வீரராக களம் இறங்கி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். இது பார்ப்போர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதற்கான காரணம் வெளிவந்துள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் போதே தென்னாப்பிரிக்கா வீரர்கள் மூன்று பேர் காயமடைந்திருந்தனர்.
கேப்டன் பவுமா முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்றாவது போட்டியில் அவர் விளையாடவில்லை. மேலும் ஆல் ரவுண்டர் வியான் முல்டர் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சொந்த நாடு திரும்பி இருக்கிறார். மேலும் மற்றொரு வீரரான டேனி டி ஜார்ஜியும் காயத்திலிருந்து குணமாகி வருவதால் அவரும் இந்த போட்டியில் விளையாடவில்லை. மேலும் மூன்றாவது போட்டியின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதையும் படிங்க : ஹாங்காங் 6 பேர் கிரிக்கெட்.. 12 வருடத்திற்கு பின் இந்தியா பங்கேற்பு.. பாக் உட்பட 12 அணிகள்.. தொடங்கும் தேதி அறிவிப்பு
இதனால் வீரர்களுக்கு சோர்வு ஏற்பட்ட நிலையில் அதனை சரி செய்யும் விதமாக தென்னாப்பிரிக்காவின் முழு நேர பேட்டிங் பயிற்ச்சியாளர் டுமினி மாற்றுவீரராக களம் இறங்கி தென்னாப்பிரிக்க அணிக்காக பீல்டிங் செய்து கொண்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் டுமினி முழு நேர பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.






