நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக ரோகித் சர்மா நீக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறியது. இதற்கு அடுத்து நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா குறித்து சவுரவ் கங்குலி பேசியிருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மா நீக்கப்பட்ட பொழுது, அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேசும்பொழுது, இது ரோகித் சர்மாவுக்கு சுதந்தரத்தை கொடுக்கும், மேலும் அவர் பேட்டிங்கில் முன்பு போல மிகச் சிறப்பாக வர முடியும் என்பதாக பேசி இருந்தார்.
இதற்கு ஏற்றபடி ஆரம்பப் போட்டியில் நன்றாக ஆரம்பித்த ரோகித் சர்மா சிஎஸ்கே அணிக்கு எதிராக ஒரு சதமும் அடித்தார். ஆனால் அதற்குப் பிறகு அவருடைய பேட்டிங்கில் தொடர்ந்து ஐந்தாறு இன்னிங்க்களாக மோசமான செயல்பாடு வெளிப்பட்டு வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு அவரது பேட்டிங் செயல்பாடு சிறப்பாக இல்லாததும் ஒரு காரணமாக மாறிவிட்டது.
இந்த நிலையில் இவர்தான் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை கேப்டனாக வழி நடத்துகிறார் என்பது, தற்போது இந்திய முன்னாள் வீரர்கள் இடையே பெரிய கவலையாக மாறி வருகிறது. அவர்கள் இது குறித்து வெளிப்படையாகவே கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் ரோகித் சர்மாவுக்கு டி20 உலகக்கோப்பையை பொறுத்தவரை புள்ளி விபரங்கள் சரியாகவும் இல்லை. அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இருக்கும் சிறந்த புள்ளி விபரங்கள் போல் கிடையாது. மேலும் கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு, அப்போதைய துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும் கே.எல்.ராகுலும் மிகப்பெரிய காரணமாக இருந்தார்கள்.
இதையும் படிங்க : பதிரனா 100% உடல் தகுதி .. இலங்கை கிரிக்கெட் அறிவிப்பு.. திரும்ப சிஎஸ்கே அணிக்கு வர வாய்ப்பு இருக்கா ?
தற்போது இதற்கு மாற்றாக பேசியிருக்கும் சவுரவ் கங்குலி கூறும் பொழுது “டி20 உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி சிறந்த அணி. ரோகித் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடுவார். அவர் தொடர்களில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். பெரிய நிலைகள் வரும்பொழுது அவர் சிறப்பாக விளையாடுவார்” என்று கூறியிருக்கிறார். ஆனால் ரசிகர்கள் இதற்கு எதிராக விமர்சனங்கள் செய்து வருகிறார்கள்.