கிரிக்கெட்

சவுரவ் கங்குலி பதவி விலகலா ? பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

நவீன கிரிக்கெட்டில் சச்சின் காலத்தில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் ஒரு தனிப்பட்ட பெரிய இரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்தவர் என்றால் அது தாதா சவுரவ் கங்குலிதான். 90களின் பிற்பகுதியில் இந்தியாவில் கிரிக்கெட்டில் சச்சினுக்கு இருந்த புகழ் என்பது நாட்டின் வேற எந்த மனிதருக்கும் இல்லாத அளவு பரந்து விரிந்தது. அவரது காலத்தில் தனக்கென பெரிய ஒரு இரசிகர் கூட்டத்தை சவுரவ் கங்குலி கொண்டிருந்தார் என்பது மிகப்பெரிய விசயம். இதற்கு அவரது பேட்டிங் திறமை தாண்டி, தலைமைப் பண்பும், களத்தில் ஆக்ரோசமாகச் செயல்படும் குணமும் ஒரு காரணமாகும். இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை ஆக்ரோசமானதாய் வடிவமைத்த முதல் கேப்டன் சவுரவ் கங்குலிதான்!

- Advertisement -

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற அவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்து வருவது நாம் அறிந்த விசயமே. இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியைக் கொண்டுவந்தது, ஐ.பி.எல் தொடரில் இரு புதிய அணிகளைக் கொண்டுவந்து வருமானத்தைப் பெருக்கியதோடு, கோவிட்டுக்கு மத்தியில் பத்து அணிகளை வைத்து இந்தியாவில், மைதானத்தில் இரசிகர்களுக்கு அனுமதியோடு, வெற்றிக்கரமாய் ஐ.பி.எல் தொடரை நடத்திக் காட்டியது என இந்தப் பதவியிலும் அவரது சிறப்பான தொடர்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய விசயத்தில் மட்டுமே இவர் மீது சில விமர்சனங்கள் வெளியில் தொடர்கிறது.

இந்த நிலையில் இவரது ட்வீட் ஒன்று நேற்று இந்திய கிரிக்கெட் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. சவுரவ் கங்குலி தனது ட்வீட்டில் “1992 ஆம் ஆண்டு எனது கிரிக்கெட் பயணம் துவங்கி இப்போது 2022ல் முப்பது வருடங்களைத் தொட்டிருக்கிறது. கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. குறிப்பாக உங்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு நபருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது பயணத்தில் ஒரு பங்காக இருந்து ஆதரவளித்தது இன்று நான் இருக்கும் இடத்தை அடைய உதவி இருக்கிறது. இன்று நான் பலருக்கு உதவக்கூடிய ஒன்றைத் துவங்க திட்டமிட்டுள்ளேன். நான் வாழ்க்கையில் இந்த அத்தியாயத்தில் நுழையும் போதும், உங்களின் ஆதரவு தொடரும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

சவுரவ் கங்குலியின் இந்த ட்வீட்தான் அவர் பி.சி.சி.ஐ பொறுப்பிலிருந்து விலகுகிறார் என்ற சலசலப்பை உருவாக்கி விட்டது. இதுக்குறித்து மறுத்த பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா “சமூக வலைத்தளத்தில் பரவுகின்ற செய்தி வதந்தியானது. அதில் உண்மை இல்லை. நானும் எனது சகாக்களும் வரவிருக்கும் வாய்ப்பிலும் இந்திய கிரிக்கெட்டின் நலனைப் பாதுகாப்பதில் முழுக்கவனம் செலுத்துவோம்” என்று கூறினார்.

- Advertisement -

சுதாரித்துப் பின்பு இதுகுறித்து பேசியுள்ள சவுரவ் கங்குலி “என் ட்வீட் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. நான் உலகம் தழுவி பலருக்கும் உதவக்கூடிய வகையில் கல்விக்காக ஒரு அப்ளிகேசனை வெளியிட இருக்கிறேன். இதைத்தான் நான் சுருக்கமாகக் கூறியிருந்தேன்” என்று தெளிவுப்படுத்தி இருக்கிறார். ஆனால் அதற்குள் சமூகவலைத்தளங்களில் பல்வேறு யூகங்கள் கிளப்பப்பட்டு விட்டது!

Published by