கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி படைத்த வரலாற்று சாதனை ஆவணப்படமாக உருவாகிறது – ஜனவரியில் வெளியீடு

பொதுவாக ஒரு சிறந்த நிகழ்வை அப்படியே தொகுத்து டாக்குமென்ட்ரியாக (ஆவணப்படம்) வெளியிடுவது பழக்கப்பட்ட விஷயம். கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரையில் ஐசிசி தரப்பில் இது போன்ற ஆவணப்படம் இதற்கு முன்னர் ஒரு சில சமயங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி கூட இது மாதிரியான ஆவணப் படங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது இந்திய அணி குறித்து ஒரு ஆவணப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகப் போகிறது. அந்த ஆவணப்படத்தை சோனி வெளியிடப் போவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2021-22 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. முதல் போட்டியில் தோல்வியடைந்த பின்னர் மிக சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை அதனுடையசொந்த மண்ணிலேயே இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெறும். அந்த நிகழ்வுதான் தற்பொழுது “Down Underdogs” என்கிற பெயரில் சோனி நெட்வொர்க் வாயிலாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.

2021-22 ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி படைத்த வரலாறு

2018&19 ஆம் ஆண்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. அதன் பின்னர் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் 2021&22 ஆம் ஆண்டில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்திய அணி படு தோல்வி அடைந்தவுடன் தவிர்க்க முடியாத காரணத்தினால் விராட் கோலி இந்தியாவுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் துணை கேப்டன் அஜிங்கிய ரஹானே இந்திய அணியை இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் வழி நடத்த தொடங்கினார். கேப்டனாக மட்டுமின்றி 2வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெறவும் செய்தார். இதன் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என்று சமமாக இருந்தது.

- Advertisement -

பின்னர் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி டிராவாகி விட, வெற்றியை தீர்மானிக்கும் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. காபாவில் நடந்த அந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சுப்மன் கில் மற்றும் இறுதியில் ரிஷப் பண்ட் துணையோடு இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 4வது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து தொடர்ச்சியாக இரண்டு முறை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய பெருமையை இந்திய அணி பெற்றது.

கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத இந்த டெஸ்ட் தொடர் சோனி நெட்வொர்க் மூலமாக ஒரு ஆவணப்படம் வாயிலாக வருவது தற்போது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.