டாப் 10

ஒருநாள் போட்டிகளில் சதம் அடிக்க அதிக பந்துகள் எடுத்துக் கொண்ட 5 இந்திய வீரர்கள்

ஒருநாள் போட்டிகளில், ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப அணியின் தேவைக்கேற்ப ஆடுவது மிகவும் அவசியம். முதலில் நிதானமாக ஆரம்பித்து, போக போக அதிரடி காட்டினாலே, அணிக்கு ஒரு நல்ல ஸ்கோர் கிடைக்கும். ஆனால் கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் ஒருநாள் போட்டிகளிலும் அதிரடியாக ஆடி அதிக ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளார்கள். ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் ஏபி டிவில்லியர்ஸ். இந்திய அணி தரப்பில் கேப்டன் விராட் கோஹ்லி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 52 பந்துகளில் சதம் அடித்தார்.

- Advertisement -

காலங்கள் மாற மாற, கிரிக்கெட்டின் தரமும் உயர்ந்துக் கொண்டே போகிறது. தற்போது, 50 ஓவரில் 370 ரன்களே மிகக் குறைவு என்ற மனநிலை வந்துவிட்டது. கடுமையான மைதானத்திலும் ஒரு சில வீரர்கள் அபாரமாக ஆடி சதம் அடித்துள்ளனர். மற்ற சில வீரர்கள், எளிதான பிட்சிலும் நிதானமாக ஆடி ரசிகர்களுக்கு அதிருப்தி அளித்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் அதிக பந்துகள் சந்தித்த பிறகு சதம் அடித்த இந்திய வீரர்களைப் பற்றி பின்வருமாறு காண்போம்.

5. சவுரவ் கங்குலி – 136 பந்துகள்

2000ல் தென்னாப்பிரிக்கா அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஜாம்ஷெத்பூர் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய தென்னாபிரிக்கா அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்த ஸ்கோரை துரத்துவதே மிகக் கடினம் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

200 ரன் இலக்கை அடைய, இந்திய தொடக்க வீரர்கள் கங்குலி மற்றும் சச்சின் களமிறங்கினர். தொடக்கத்திலேயே இந்திய அணி சச்சின் மற்றும் சுனில் ஜோஷியின் விக்கெட்டை இழந்து. மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்ட கங்குலி, டிராவிட்டுடன் இணைந்து மிகவும் நிதானமாக ஆடினார். இறுதியில், கங்குலி ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

4. சச்சின் டெண்டுல்கர் – 138 பந்துகள்

கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 100வது சதத்தை அடைய மிகவும் கஷ்டப்பட்டார். பங்களாதேஷ் அணிக்கு எதிராக மிகவும் கடினமான ஆடுகளத்தில் சதம் அடித்து, சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை அடைந்தார்.

அப்போட்டியில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இருப்பினும், சச்சின் டெண்டுல்கர் சதம் அடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் பொறுமையாக ஆடினார். 138 பந்துகளில் சச்சின் சதம் விளாசினார். அப்போட்டியில், பங்களாதேஷ் அணி சுலபமாக சேஸ் செய்து வெற்றி பெற்றது.

3. சச்சின் டெண்டுல்கர் – 138 பந்துகள்

இலங்கைக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் நிதானமாக ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திய அணி 24 ஓவரில் 103 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு ராபின் சிங்கும் சச்சின் டெண்டுல்கரும் இணைத்து 100 ரன்கள் சேர்த்தனர்.

மீண்டும் எந்த ஒரு விக்கெட்டும் இழந்தது விட கூடாதென்ற நோக்கத்தில், இருவரும் இருந்தனர். இறுதியில், சச்சின் அதிரடி காட்டுவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால், துரதஷ்டமாகா அவர் 47வது ஓவரில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

2. அஜய் ஜடேஜா – 138 பந்துகளில்

1999 உலகக் கோப்பையில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை ஓவல் மைதானத்தில் எதிர்கொண்டது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவரில் 282 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மார்க் வாஹ்க் 83 ரன்கள் அடித்தார். இமாலய இலக்கை நோக்கி இந்திய ஒப்பனர்கள் களமிறங்கினர்.

கங்குலி 8 ரன்னில் வெளியேற சச்சின் டெண்டுல்கர் டக் அவுட் ஆக, இந்திய அணி 17/4 என்ற பரிதாபமான நிலையில் இருந்தது. இந்திய அணியை 100 ரன்னுக்குள் சுருட்ட வேண்டுமென்ற நோக்கில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இருந்தனர். அஜய் ஜடேஜாவும் ராபின் சிங்கும் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுமையாக ஆடினார். அஜய் ஜடேஜா 138 பந்துகளில் சதம் அடித்தார். இருப்பினும் இந்திய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

1. சவுரவ் கங்குலி – 141 பந்துகள்

பெப்சி கோப்பையின் இரண்டாவது போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. நாக்புரில் நடந்த இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் அஜய் ஜடேஜா 11 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் கங்குலியுடன் ராகுல் டிராவிட் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் இணைத்து 2வது விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்தனர். எப்போதும் ராகுல் டிராவிட் தான் நிதானமாக ஆடுவார். ஆனால் மாற்றாக இம்முறை கங்குலி அதைப் பின்பற்றினார். ராகுல் டிராவிட் இந்தப் போட்டியில் 98 ஸ்டிரைக் ரேட்டில் 116 ரன்கள் விளாசினார். கங்குலி 160 பந்துகளில் 130 ரன்கள் அடித்தார். கங்குலியின் நிதானமான ஆட்டம் இந்திய அணியை பாதிக்கவில்லை. இறுதியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது.

Published by